தேடல்

நேபாள மாஜி பிரதமர் மீது நாற்காலி வீச்சு

காத்மாண்டு:நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் கடும் கண்டனத்தின் காரணமாக, முன்னாள் பிரதமர் பிரசாந்தா, ஆடம்பர வீட்டை காலி செய்யவும், சொகுசு காரை திருப்பிக் கொடுக்கவும் முடிவு செய்துள்ளார்.

முதல் பிரதமர் பிரசாந்தா:நேபாளத்தில், மன்னராட்சி முடிவுக்கு வந்த பின் நடந்த ஜனநாயக முறைப்படியான தேர்தலில், மாவோயிஸ்ட் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. பிரதமராக, புஷ்பகமல் என்ற பிரசாந்தா பொறுப்பேற்றார். நேபாளத்தில், குடியரசு உருவான பிறகும், இன்னும் அரசியலமைப்பு சட்டம் இயற்றப் படவில்லை. பார்லிமென்டில், எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லாத காரணத்தால், அரசியலமைப்பு சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. இதன் காரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன், தேசிய அரசு உருவாக்கப்பட்டது.சில கட்சிகள், இந்த அரசில் இருந்து விலகியதால், தற்போது, பார்லிமென்ட் கலைக்கப்பட்டு, விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இடைக்கால பிரதமராக பாபுராம் பட்டாரை உள்ளார்.

பேச அனுமதியில்லை:இந்நிலையில், காத்மாண்டுவில், மாவோயிஸ்ட் கட்சியின் ஐந்து நாள் மாநாடு நடந்தது. இதில், தோழமைக் கட்சிகளும் பங்கேற்றன. கோஷ்டி தலைவர்களுக்குள் கடும் வாக்குவாதமும், கை கலப்பும், இந்த மாநாட்டில் அரங்கேறின. பிரசாந்தாவின் அதிருப்தியாளர்கள், அவர் மீது, நாற்காலிகளை தூக்கி எறிந்தனர். பிரதமர் பாபுராம் பட்டாரையை, அவரது அதிருப்தியாளர்கள் பேச அனுமதிக்கவேயில்லை. ஒரு கட்டத்தில், சிலர் அவரை அடிக்கப் பாய்ந்தனர்.

வெளியேற முடிவு:முன்னாள் பிரதமர் பிரசாந்தா, சொகுசு வீட்டில் குடியேறியுள்ளதை, பலர் விமர்சனம் செய்தனர். இவர், ஆடம்பர வீட்டை வாங்கியுள்ளதாகவும், செய்தி வெளியானது. ஆனால், இதை மறுத்த பிரசாந்தா, சொகுசு வீட்டில் வாடகைக்குத் தான் தங்கியிருக்கிறேன். அரசு கொடுத்துள்ள காரில் தான் செல்கிறேன். நான் சொகுசு வீட்டை, பல கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக, புரளி கிளப்பப்பட்டுள்ளது. எனவே, இந்த வீட்டை விட்டு, விரைவில் வெளியேறுகிறேன். அரசு கொடுத்த காரையும், வாபஸ் பெறுகிறேன் என்றார்.