ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், அனுமதி பெற்ற கட்டடங்களை மட்டுமே கட்ட
வேண்டும் என்ற நடைமுறையை உருவாக்கும் விதமாக, கடந்த 1993ல் மாஸ்டர்
பிளான், முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அரசியல்,
அதிகாரம், பண பலம் கொண்டவர்கள், ஊட்டி, மசினகுடி, கூடலூர், குன்னூர்,
கோத்தகிரி ஆகிய இடங்களில், விதிமீறிய கட்டடங்கள் கட்டி விற்று
விடுகின்றனர்.விதிமீறிய கட்டடங்கள் அதிகரித்ததால், ஐகோர்ட் மற்றும்
சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. கோர்ட் உத்தரவுப்படி,
விதிமீறி, அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டது. அதற்கும் சிலர் தடை உத்தரவு பெற்றதையடுத்து, நடவடிக்கை
தடைபட்டது.
இதுதொடர்பாக, சட்ட ரீதியான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம்
மேற்கொண்டு, அனுமதியற்ற கட்டடங்கள் மீதான நடவடிக்கையை துரிதப்படுத்த
வேண்டும் என, பல தரப்பிலும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.முன், நீலகிரிக்காக
மாஸ்டர் பிளான் அறிமுகம் செய்த முதல்வர் ஜெயலலிதா, மண்டல திட்ட ஆணையம்
ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.ஆனால், 1996ல் ஏற்பட்ட ஆட்சி
மாற்றத்துக்குப் பின், இந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டது. இந்த
உத்தரவுக்கு மீண்டும் உயிரூட்டினால், நீலகிரி மாவட்டத்தில், அனுமதியற்ற
கட்டடங்கள் முளைப்பதை தடுக்க முடியும் என்கின்றனர், இயற்கைச்சூழல்
ஆர்வலர்கள்.
