எஸ்.பி., கெடுபிடி; போலீசார் புலம்பல்!
மதுரை எஸ்.பி., பாலகிருஷ்ணன், சற்று கெடுபிடி ஆசாமி. பொறுப்பேற்றதிலிருந்தே அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் நடந்த, கிரைம் மீட்டிங்கில் பேசியவர், நிலுவை வழக்குகளை போலீசார், அரசு வழக்கறிஞர்கள் உதவியுடன், விரைந்து முடிக்க வேண்டும். நீண்டகாலம் நிலுவையிலுள்ள வழக்குகளில், குற்றப் பத்திரிகைகளை, விரைந்து தாக்கல் செய்ய வேண்டும். கோர்ட் உத்தரவுகளை, காலதாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். புகார்களுக்கு இடமளிக்காத வகையில் போலீஸ் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என, வரிசையாக பல, வேண்டும்களை அடுக்கவே, இப்படி ஜரூராக வேலை செய்து பழக்கமில்லாத போலீசாரின் முகம் மாறியது. மதுரை சிட்டியில, அரசியல் செல்வாக்கோட, இத்தனை நாள் காலம் தள்ளிட்டோம்... இப்படி, ஏகப்பட்ட கெடுபிடிகளைப் போட்டா, சுளுவா பணம் பாக்க முடியாது மச்சி... மாத்தி யோசிக்க வேண்டியது தான்... என ஒரு போலீஸ்காரர் புலம்ப, பேஸ் ரீடிங்கில் இதைக் கண்டுபிடித்த எஸ்.பி., சிலர் இந்த கெடுபிடிகளைத் தாங்க மாட்டாங்கன்னு தெரியும்... நல்லபடியா வேலை செய்றவங்களுக்கு தான் இனி புரமோஷன்... எனக் கூறியதும், போலீசார், கப்சிப்!
மனு எழுதுவோரைக் கண்டு பயப்படும் வட்டாட்சியர்!
சென்னைக்கு அருகே, ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலக வளாகத்தில், ஐந்து பேர், மனு எழுதிக் கொடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்; பொதுமக்களுக்கு இது வசதியாக உள்ளது. சமீப காலமாக, இவர்கள் ஐந்து பேரும், இவ்வளாகத்தில் அமர, திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. வட்டாட்சியர் லட்சுமியிடம் பொது மக்கள் கேட்டால், அவர்களிடம், சால்ஜாப்பு சொல்லி அனுப்பி விடுகிறார். அலுவலக ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள், உண்மையைப் புட்டு வைத்தனர். இங்கு வரும் மக்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்க, மனு எழுதித் தரச் சொல்கின்றனர். இதனால், மற்ற பணிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன என, அவர்கள் கூறினர். இதைக் கேட்ட பொதுஜனம் ஒருவர், ஒண்ணும் சொல்வதற்கில்லே... தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மனு எழுதிக் கொடுக்க மாட்டோம்ன்னு இவங்களிடம் எழுதி வாங்கிக் கொண்டுள்ளனர். இந்த மனுக்களால், இவங்களுக்கே, ஆப்பு விழுந்துடுமோன்னு பயப்படுறாங்க போல... எனக் கூறிச் சிரித்தார்.

