எனக்கு எப்போபோட்டே ஓட்டு?
மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில், அனுமதியில்லாமல் ஆக்கிரமித்த கடைகள் நிறைய இருப்பதாக, புகார் எழுந்தது. மாநகராட்சி கமிஷனர், நந்தகோபால் தலைமையிலானஅதிகாரிகள், அதிகாலை, 4.30 மணிக்கு, திடீர், ரெய்டு நடத்தினர். 300க்கும் மேற்பட்ட கடைகள், ஆக்கிரமித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு கடைகளில் இருந்த, எட்டு டன் காய்கறிகள் கைப்பற்றப்பட்டன. ஒரு கடையில் இருந்த காய்கறிகளை அள்ளிய போது, குறுக்கிட்ட பெண் ஒருவர், சார்... இந்த ஒரு நாள் விடுங்க... இனி நான் வியாபாரம் செய்ய மாட்டேன்... என, கோரிக்கை வைத்தார். இந்தா பாரும்மா... நானே உன்னை பல தடவை கண்டிச்சிட்டேன்... நீ கேட்குற மாதிரி இல்ல... என, கறாராய் பதிலளித்து, காய்கறிகளை அள்ளினார் ஒரு அதிகாரி.
ஆக்ரோஷமடைந்த பெண், நான் ஓட்டு போட்டதால தான், நீ அதிகாரி... எங்களால பதவிக்கு வந்துட்டு... என் கடையை அள்ளுவியா... என, கோபத்தை கக்கினார்.
நான் கஷ்டப்பட்டு படிச்சு, பாஸ் ஆகி, அதிகாரி ஆகியிருக்கேன்; நீ ஓட்டு போட்டா நான் வந்தேன்...? என, பதிலுக்கு கோபமானார் அதிகாரி. அரசியல்வாதிக்கும், அரசு அதிகாரிக்கும் வித்தியாசம் தெரியாத அந்த பெண்ணுக்கு, கடைசி வரை, உண்மை நிலை புரியவில்லை!
டின் கட்டிய பயனாளிகையைப் பிசைந்த பி.டி.ஓ.,!
வரும், ஜூலை 5ம் தேதி, மாநிலம் முழுதும் பசுமை வீடுகளை, முதல்வர் திறந்து வைக்க உள்ளார். எனவே, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில், கட்டப்பட்டு வரும், 139 வீடுகளை, விரைந்து முடிக்க அறிவுறுத்தும் வகையில், மண்டல மேம்பாட்டு அதிகாரிகுணசேகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பயனாளிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.குணசேகரன் பேசியபோது, இதுபோன்ற திட்டத்தை, வேறு எந்த முதல்வரும் செய்ததே இல்லை. தாய் உள்ளம் கொண்ட முதல்வருக்கு, வாழ்நாள் முழுக்க, நீங்கள் கடமைப்பட்டவர்களாகி உள்ளீர்கள்... என, 10 நிமிடமாக, புகழ்ந்தபடியே இருந்தார்.தற்போது, கட்டப்பட்டு வரும் வீடுகள், எந்த நிலையில் உள்ளன என்பது குறித்து, அறிந்து கொள்ள ஆர்வம் இல்லாதவராய் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு பயனாளி எழுந்து, உரத்த குரலில் பேசினார்...அம்பது நாளா, சிமென்ட், இரும்புக் கம்பி கூட நீங்க கொடுக்கல... எப்படி கட்டுவது? வானத்துலேர்ந்து யாராவது கொண்டு கொடுத்து... வீடு, தானா எழும்பிடுமா? எனக் கோபமாகக் கேட்டார்.பதில் சொல்ல வார்த்தை இல்லாமல், கையைப் பிசைந்தபடி, எப்படியாவது வேகமா முடிச்சிடுங்க... எனக் கூறி, கூட்டத்தை முடித்துக் கிளம்பினார்.

