பக்க வாத்தியம்

சின்னப் பசங்க எல்லாம்...!

பா.ம.க., சார்பில், புதிய அரசியல் புதிய நம்பிக்கை கருத்துக் கேட்புக்கான முன் வரைவு நூலை கோவையில் வெளியிட, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வந்திருந்தார். பேட்டி கொடுத்தபோது, வழக்கம்போல், திராவிடக் கட்சிகளை வசை மாரி பொழிந்தார். நிருபர் ஒருவர், இவ்வளவு காலமா கூட்டணி வச்சுட்டு, இப்ப திட்டறீங்களே... என்றார்.அதற்கு, அவர், ஏதோ, சந்தர்ப்ப சூழ்நிலையால் கூட்டணி வைத்தோம்; அதற்காக மக்களிடம் ஏற்கனவே மன்னிப்பு கேட்டு விட்டோம். சினிமாக்காரங்க அரசியலுக்கு வந்து தான் தமிழகம் சீரழிஞ்சுட்டு இருக்கு என்றார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரையும் கூட அவர் விட்டு வைக்கவில்லை.இறுதியாக, கோவையிலும், திருச்சியிலும் பத்திரிகையாளர்களைப் பார்ப்பதில் எனக்கு சந்தோஷம் தான்; ஆனா, சென்னையில, இப்ப சின்னச் சின்னப் பசங்க எல்லாம் பத்திரிகைகாரங்கன்னு சொல்லிட்டு, என்னென்னவோ கேள்வி கேக்கறாங்க... என்றார்.அதைக் கேட்டதும் நிருபர்கள் அதிர்ச்சியடைந்தபடி அங்கிருந்து நகர்ந்தனர்.

பிறந்த நாளுக்கா...?

மதுரையில், ஏப்ரல் இறுதியில் நடக்கவுள்ள மாநில மாநாட்டுக்கான இடத்தை தேர்வு செய்ய, பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வந்திருந்தார். கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னையில் ஜெயலலிதாவை, ராதாகிருஷ்ணன் சாடிக் கொண்டிருந்தார். எங்களுடன் இயற்கையாக அமைந்த கூட்டணியாக, அ.தி.மு.க., விளங்குகிறது என்று அத்வானி ஏற்கனவே பேசியதற்கு முரணாக உங்கள் கருத்து இருக்கிறதே...? என்று நிருபர்கள் கேட்டதும், ராதாகிருஷ்ணன் மழுப்பலாக பதிலளித்தார்.மேலும், மின்வெட்டு பிரச்னைக்காக ஏற்கனவே, பிப்., 24ல் அறிவிக்கப்பட்ட போராட்டம், பிப்., 27க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றார். உடனே, குறும்புக்கார நிருபர் ஒருவர், அன்றைக்கு முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் என்பதால் தள்ளி வைத்து விட்டீர்களா...? என்று கேட்டதும், ராதாகிருஷ்ணன் அதிர்ச்சியடைந்து விட்டார்.அவர், அது வேற உண்டா... அதற்காக எல்லாம் தள்ளி வைக்கவில்லை. பிப்., 24 வெள்ளிக்கிழமை, கோவில் திருவிழா என்பதால் தள்ளி வைத்தோம்... என்று கூறி சமாளித்தார்.பிடியில சிக்காம பதில் சொல்றாரே... என்று முணுமுணுத்தபடியே நிருபர்கள் கலைந்தனர்.