பயங்கரவாத தடுப்பு மையத்தை எதிர்த்த மனு:ஐகோர்ட்டில் தள்ளுபடி

சென்னை:மத்திய அரசு அமைக்க உள்ள தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜயலட்சுமி சண்முகம் என்பவர் தாக்கல் செய்த மனு:தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தை அமைப்பது தொடர்பாக, மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாக இது உள்ளது. இந்த முடிவை எடுப்பதற்கு முன், மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசிக்கவில்லை. மாநிலங்களின் அதிகாரங்களை, மத்திய அரசு பறிப்பது போல் உள்ளது. இந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி அருணாஜெகதீசன் அடங்கிய முதல் பெஞ்ச் விசாரித்தது. மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் எஸ்.சீதாலட்சுமி ஆஜரானார்.

முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:தேதியில்லாத அறிவிப்பாணையால், இந்த ரிட் மனுவை அனுமதிக்க முடியாது. தேதியில்லாத இந்த அறிவிப்பாணையை எங்கிருந்து பெற்றார் என்கிற கேள்விக்கு, மனுதாரரின் வழக்கறிஞரால் எங்களை திருப்திபடுத்த முடியவில்லை.
இந்த விஷயம் தொடர்பாக மத்திய அரசுக்கும் வெவ்வேறு மாநிலங்களுக்கும் இடையே விவாதங்கள், ஆலோசனைகள் நடந்து வருகிறது என்பதும், இறுதி அறிவிப்பாணை இன்னும் வெளியிடப்படவில்லை என்பதையும் இந்த கோர்ட் கவனத்தில் கொண்டுள்ளது. எனவே, இந்த ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்க விரும்பவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.