பயஸ் காட்டும் பாதை...

சொந்த வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளை கடந்து, சாதனைப் படிகளில் சளைக்காமல் ஏறிக் கொண்டிருக்கிறார் இந்தியாவின் லியாண்டர் பயஸ். சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்று, சாதித்தார். கடந்த 25 ஆண்டுகளாக டென்னிஸ் விளையாடி வரும் பயஸ் அளித்த பேட்டி:
* ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வெல்ல வேண்டும் என்ற உங்களது நீண்ட கால கனவு இம்முறை எப்படி சாத்தியமானது?
எனக்கு நிகராக விளையாடக்கூடியவரை தேடி வந்தேன். இம்முறை தான் நல்ல பார்ட்னர் கிடைத்தார். செக் குடியரசின் ஸ்டெபானெக் களத்தில் கடினமாக உழைக்கக்கூடியவர். இவருடன் ஜோடி சேர்ந்து விளையாடியது தான் கோப்பை வெல்ல முக்கிய காரணம்.
* கடந்த காலங்களில் 30 வயதில் வீரர்கள் ஓய்வு பெற்று விடுவர். தற்போது அந்த நிலை மாறக் காரணம் என்ன?
மற்றவர்களை பற்றி சொல்ல விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் எந்த வயதிலும் விளையாடலாம். விம்பிள்டன் கலப்பு இரட்டையரில் நவரத்திலோவாவுடன் சேர்ந்து பட்டம் வென்ற போது, அவருக்கு வயது 47. உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க தேவையான டிப்ஸ்களை எனக்கு அளித்தார். ஒழுக்கமான வாழ்க்கை முறையை கடைபிடிக்கிறேன். சிகரெட், மது பழக்கம் கிடையாது. நிறைய மூச்சு பயிற்சிகளை செய்கிறேன். இது மனதுக்கு ரிலாக்ஸ் அளித்து, நீண்ட காலம் வாழ உதவுகிறது.
* தாங்கள் 38 வயதிலும் டென்னிஸ் விளையாடுவது குறித்து?
வயது என்பது ஒரு நம்பர் தான். டென்னிசில் களமிறங்கிய போது, எனது பெற்றோரை போல பிரகாசிக்க விரும்பினேன். எனது அம்மா, இந்திய கூடைப்பந்து அணியின் கேப்டனாக இருந்தார். அப்பா வெசி பயஸ் 1972ல் ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலம் வென்றவர். டென்னிஸ் அல்லாமல் வேறு எந்த துறையாக இருந்தாலும், அதில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எனது லட்சியம். வயதை பற்றி மற்றவர்கள் ஏதாவது பேசலாம். ஒரு விஷயத்தில் சாதிக்க வேண்டும் என்ற உறுதி இருக்கும் வரை, நிச்சயமாக வெற்றி பெறலாம்.
* இந்த ஆண்டு நடக்க உள்ள லண்டன் ஒலிம்பிக்கில் தங்களிடம் பதக்கம் எதிர்பார்க்கலாமா?
கடந்த 1996, அட்லாண்டா ஒலிம்பிக், ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றேன். பின் இரட்டையர் பிரிவில் 2004, 2008ல் பதக்க வாய்ப்பை நழுவ விட்டேன். எனது அடுத்த இலக்கு லண்டன் ஒலிம்பிக் தான். காயம் எதுவும் ஏற்படாமல் இருந்தால், கண்டிப்பாக பதக்கம் வெல்வேன்.
--------------
யுவராஜ் கவனிக்க...
உடல்ரீதியான பாதிப்புகளில் இருந்து துணிச்சலாக மீண்டவர் தான் பயஸ்.
* பயசுக்கு ஐந்து வயதில் வலிப்பு நோய் ஏற்பட்டது. இதையடுத்து கால்பந்து விளையாடக் கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தினர். 7 வயதுக்கு பின் வலிப்பு நோய் படிப்படியக குறைய, டென்னிஸ் விளையாட்டில் சேர்க்கப்பட்டார்.
* பின் முழங்கால் பகுதியில் உள்ள எலும்பு வழக்கத்துக்கு மாறாக கூடுதலாக வளர்ந்து இருப்பதாக பிரச்னை ஏற்பட்டது. இதற்காக பிரத்யேக சிகிச்சை மேற்கொண்டார்.
* அடுத்து, பயசின் இருதயத்தில் லேசான சத்தம் கேட்டது. சோதனை செய்ததில் இவரது இருதயத்தில் சிறிய துளை இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், பெரிய அளவில் பாதிப்பு இல்லை. என்றாலும், ஆண்டு தோறும் இருதய பரிசோதனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளார்.
* 1996-97ல் இவரது மூளையில் மலேரியா பாதிப்பு ஏற்பட்டது.
* பின் 2003ல் மூளையில் கட்டி இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. மருத்துவ சோதனையில், மூளையில் கிருமி தொற்று என்பது தெரிய வந்தது. இதற்காக அமெரிக்காவில் நீண்ட நாட்கள் சிகிச்சை பெற்றார்.
இப்படி பல்வேறு தடைகளை தகர்த்து சாதித்து வரும் பயஸ், இளம் வீரர்களுக்கு சரியான பாதை காட்டுகிறார். இவரை முன்னுதாரணமாக கொண்டால், கேன்சர் பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு யுவராஜும் சாதிக்கலாம்.
------------
பட்டம் 13
பயஸ் வென்ற 13 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்.
ஆண்கள் இரட்டையர்
1999- பிரெஞ்ச் ஓபன்(உடன் மகேஷ் பூபதி)
1999-விம்பிள்டன்(உடன் மகேஷ் பூபதி)
2001-பிரெஞ்ச ஓபன்(உடன் மகேஷ் பூபதி)
2006-யு.எஸ்., ஓபன்(உடன் மார்டின் டாம்)
2009-பிரெஞ்ச் ஓபன்(உடன் லூகாஸ் லூயி)
2009-யு.எஸ்., ஓபன்(உடன் லூகாஸ் லூயி)
2012-ஆஸ்திரேலிய ஓபன்(உடன் ஸ்டெபானக்)
கலப்பு இரட்டையர்
1999-விம்பிள்டன்(உடன் லிசா ரேமண்ட்)
2003-ஆஸ்திரேலிய ஓபன்(உடன் நவரத்திலோவா)
2003-விம்பிள்டன்(உடன் நவரத்திலோவா)
2008-யு.எஸ்., ஓபன்(உடன் காரா பிளாக்)
2010- ஆஸ்திரேலிய ஓபன்(உடன் காரா பிளாக்)
2010-விம்பிள்டன்(உடன் காரா பிளாக்)