புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே வாடகைக்கு அமர்த்தப்பட்ட காரின் டிரைவரை
தாக்கிவிட்டு, காரை கடத்திச்சென்ற இரு வாலிபர்களை போலீஸார்
தேடிவருகின்றனர்.திருச்சி டவுன் கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர்
சபியுல்லா(45). இவர் சொந்தமாக கார் (டாடா இண்டிகா) வைத்து திருச்சி
சென்ட்ரல் பஸ்ஸ்டான்டில் வாடகைக்கு ஓட்டிவருகிறார். நேற்று முன்தினம் இரவு
இவரது காரை வாடகைக்கு அமர்த்திய இரண்டு வாலிபர்கள், தாங்கள் கல்லூரி
மாணவர்கள் என்றும், புதுக்கோட்டைக்கு செல்லவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
இதை நம்பிய சபியுல்லா இருவரையும் காரில் ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டைக்கு
சென்று கொண்டிருந்துள்ளார்.
கார் வெள்ளனூர் அருகே வந்துகொண்டிருந்தபோது திடீரென வாலிபர்கள் இருவரும்,
டிரைவர் சபியுல்லாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்த அவரை
கீழே தள்ளிவிட்டு, காரை கடத்திச்சென்றுள்ளனர். தலையில் பலத்த காயத்துடன்
மயங்கிய நிலையில் கிடந்த சபியுல்லாவை, அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.கார் கடத்தல்
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள திருக்கோகர்ணம் போலீஸார்,
கடத்தப்பட்ட காரையும், கடத்திச்சென்ற இரண்டு வாலிபர்களையும்
தேடிவருகின்றனர்.
