புதுக்கோட்டை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 64வது பிறந்தநாள் விழாவை,
அ.தி.மு.க.,வினர் அனைவரும் எழுச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். முதல்வர்
ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா, புதுக்கோட்டை மாவட்டத்தில் நலத்திட்ட
உதவிகள் வழங்கும் விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக
முதல்வர் ஜெயலலிதா நீடூழி வாழ, திருவப்பூர் முத்துமாரியம்மனை வேண்டி
அ.தி.மு.க., மகளிரணியினர் பக்திபரவசத்துடன் பால்குடம் எடுத்துச் சென்று,
அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். புதுக்கோட்டை வேதநாயகி உடனுறை சாந்தநாத
சுவாமிக் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க பால்குட ஊர்வலம்
புறப்பட்டது.
இதில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சீருடைகள் அணிந்து
பால்குடம் எடுத்துச் சென்றனர்.இதுபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய
திருக்கோவில்களில் நேற்று அ.தி.மு.க.,வினர் சிறப்பு பூஜைகள் மற்றும்
வழிபாடுகள் நடத்தி வேண்டுதலை நிறைவேற்றினர். புதுக்கோட்டை
நகராட்சிக்குட்பட்ட 41 வார்டுகளிலும் விளையாட்டு மற்றும் கலாச்சார
போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகள் பெறவேண்டும் என்பதற்காக
போட்டிகளில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்துகொண்டதை
காணமுடிந்தது. புதிய பஸ்ஸ்டாண்ட், பழைய பஸ்ஸ்டாண்ட், நிஜாம்காலனி,
திருவள்ளுவர் நகர், டி.வி.எஸ்., கார்னர், மாலையீடு, கம்பன்நகர்,
பூங்காநகர், திலகர்திடல், திருக்கோகர்ணம், கோவில்பட்டி, திருவப்பூர்,
மச்சுவாடி, காந்திநகர், உசிலங்குளம் உட்பட நகரில் 64 இடங்களில் கட்சிக்கொடி
ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.இதற்காக வீதிகள்தோறும் விதவிதமான
கட்-அவுட்டுகள், ஃப்ளக்ஸ் போர்டுகள் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது.
நகரின் முக்கிய வீதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதன்காரணமாக
புதுக்கோட்டை நகர் விழாக்கோலம் பூண்டிருந்தது. பிறந்தநாள் விழாவை
முன்னிட்டு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மாணவர் அணி, இளைஞர்
அணி மற்றும் மருத்துவ அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரத்ததான
முகாமில் 640 பேர் இரத்தம் வழங்கினர். அரசு மாமன்னர் கல்லூரி கலையரங்கில்
இரண்டு நாட்கள் தொடர்ந்து நடந்த ரத்ததான முகாமை சினிமா நடிகர் ஆனந்தராஜ்
ரத்தம் வழங்கி நிறைவு செய்தார். இதில் அமைச்சர் சுப்பிரமணியன், மாவட்டச்
செயலாளர் விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ., வைரமுத்து, நகர்மன்றத் தலைவர்
கார்த்திக்தொண்டைமான், துணைத் தலைவர் சேட், பாசறை செயலாளர் ராஜசேகரன்,
கவுன்சிலர்கள் கண்ணன், தியாகு உட்பட பலர் பங்கேற்றனர்.
