"சிலந்தி' என்ற புனைப் பெயரில், "முரசொலி' இதழில் கருணாநிதி கட்டுரை:"பாத்திரமறிந்து பிச்சை இடு' என்பது பழமொழி. தமிழக மக்கள் பாத்திரமறியாது பிச்சையிட்டதன் பலனை, இன்று அனுபவிக்கின்றனர். பாம்பை பச்சைக் கொடி என நினைத்து, அதை எடுத்துத் தோளில் விட்டுக் கொண்டதன் பலனை, இன்று அனுபவிக்கின்றனர்.தமிழனுக்குள்ள ஒரே சாபக்கேடு, எத்தனை முறை குட்டுப்பட்டாலும் புத்தி வராதது. இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யாத, எண்ணற்ற சாதனைகளைச் செய்தது கருணாநிதி ஆட்சி தான்.நன்றி கொன்ற தமிழன், அந்த நல்லாட்சியை நிலைக்க வைக்கவில்லை. இப்போது, அதன் பலனை அனுபவிக்கிறான். நன்றி மறந்த தமிழினம், இனியாவது நல்ல பாடம் பெற்றிடும் என நம்புவோமாக!
தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை: ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும், மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்படுவதும், நீக்கப்படுவதுமாக உள்ளனர். இதனால், அவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். தமிழக அரசு, இவர்களின் சூழ்நிலை கருதி, மீண்டும் அவர்களைப் பணியில் அமர்த்த வேண்டும்.
லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் பேட்டி: பீகாரில், நிதிஷ்குமாரின் மாயங்கள் எல்லாம் மறைந்து விட்டன. அங்கேயும் ஊழல் நிலவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சட்டம்-ஒழுங்கும் மோசமடைந்து வருகிறது.
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேச்சு: உலக மக்கள் தொகை, 700 கோடியைத் தொட்டுள்ளது. இதனால், மேலும் அதிக மக்களுக்கு உணவளிக்கப்பட வேண்டியுள்ளது. அதே நேரத்தில், நில, நீர் வளங்கள் குறிப்பிட்ட அளவிலேயே உள்ளன. எனவே, வேளாண் உற்பத்தியில், மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த, இத்துறையில், புதுமையான அணுகுமுறைகள் அவசியமாகின்றன. இதை அடைய, வேளாண்மையில் புதிய தொழில் நுட்பங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
சத்ரிய நாடார் இயக்கத் தலைவர் சந்திரன் அறிக்கை: கூடங்குளத்திற்கு அருகில் வசிக்கும் கிராம மக்கள் அனைவரும், பாதுகாக்கப்பட்ட மின்சாரத்தின் அவசியத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டனர். அதனால், மத்திய - மாநில அரசுகள் இணைந்து, மின்வெட்டில்லா தமிழகத்தை உருவாக்க, கூடங்குளம் மின் உற்பத்தியை, உடனே தொடங்க வேண்டும்.
பா.ஜ., முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் பேட்டி: வெறும் பேச்சால் ஊழலை ஒழிக்க முடியாது என்று, அன்னா ஹசாரேவிற்கு, சோனியா மறைமுகமாக பதிலளித்துள்ளார். பேச்சால் ஊழலை ஒழிக்க முடியாது என்பது உண்மை தான். ஊழலை ஒழிக்க, மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
