தேடல்

பைனலுக்கு முன்னேறுவது இலக்கு: ரஞ்சித்

புதுடில்லி:லண்டன் ஒலிம்பிக் டிரிபிள் ஜம்ப் போட்டியின் பைனலுக்கு முன்னேறுவது இலக்கு, என, இந்திய வீரர் ரஞ்சித் மகேஷ்வரி தெரிவித்தார்.லண்டனில் 30வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 27ல் துவங்குகிறது. இதில் டிரிபிள் ஜம்ப் போட்டிக்கு இந்திய வீரர் ரஞ்சித் மகேஷ்வரி தகுதி பெற்றார்.கடந்த ஏப்ரல் மாதம் பாட்டியலாவில் நடந்த பெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில், 16.85 மீ., நீளம் தாண்டிய இவர், லண்டன் ஒலிம்பிக்கில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். மே மாதம் தாய்லாந்தில் நடந்த ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் தடகளப் போட்டியில் பங்கேற்ற இவர் தங்கம் வென்றார். அதன்பின் இவர், எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் விளையாடாததால், ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக உடற்தகுதியை நிரூபிக்கும் படி இந்திய தடகள கூட்டமைப்பு (ஏ.எப்.ஐ.,) கூறியது. சில தினங்களுக்கு முன் இத்தாலியில் நடந்த தடகளப் போட்டியில் பங்கேற்ற இவர், 16.45 மீ., தூரம் தாண்டி தனது உடற்தகுதியை நிரூபித்தார்.இதுகுறித்து ரஞ்சித் கூறியது: உடற்தகுதியை நிரூபித்ததால், தற்போது எனது கவனம் முழுவதையும் லண்டன் ஒலிம்பிக் போட்டி மீது வைத்துள்ளேன். தகுதிச் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பைனலுக்கு முன்னேற வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளேன். பீஜிங் ஒலிம்பிக்கில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. ஆனால் இம்முறை முழுத்திறமையை வெளிப்படுத்தி, டாப்-6 வரிசையில் இடம் பிடிக்க விரும்புகிறேன்.டில்லியில் 2010ல் நடந்த காமன்வெல்த் போட்டிக்கு பின், முழங்கால் காயத்துக்காக ஆப்பரேஷன் மேற்கொண்டேன். தற்போது காயம் குணமடைந்த நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான முழு உடற்தகுதியுடன் இருக்கிறேன். இம்முறை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, எனது சொந்த சாதனையான 17.07 மீ., தூரம் தாண்ட முடிவு செய்துள்ளேன். பயிற்சியின் போது 17.20 மீ., தூரம் தாண்டி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இம்முறை லண்டன் ஒலிம்பிக்கில் சாதிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு ரஞ்சித் மகேஷ்வரி கூறினார்.