புதுடில்லி:பிரணாப் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவருக்கு கிடைத்த நாட்டின் மிகப்பெரிய பதவி குறித்து கூறியதாவது:
சகோதரி அன்னபூர்ணா:ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றி பெறவேண்டும் என்ற என் பிரார்த்தனைக்கு பலன் கிடைத்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், பிரணாப் எம்.பி.,யாக இருந்த போது, அவரது டில்லி இல்லத்தில் நாங்கள் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம். அப்போது, ஜனாதிபதி மாளிகை குதிரை லாயத்தைப் பார்த்தோம். உடன், லாயத்தில் உள்ள குதிரைகளை பாருங்கள், அவற்றிற்கு எந்த பணியும் இல்லை. ஆனால், அவை சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன.
எனக்கும் மறுபிறவி இருந்தால், ஜனாதிபதி மாளிகையில், அவற்றில் ஒன்றாக பிறக்க வேண்டும் என, பிரணாப் கூறினார். அதற்கு நான், ஜனாதிபதி மாளிகையில் ஏன் குதிரையாக பிறக்க வேண்டும் என, ஆசைப்படுகிறாய்; எதிர்காலத்தில் நீ இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவாய் என, வாழ்த்தினேன். அது இன்று நடந்து விட்டது என, பெருமைபட தெரிவித்தார்.
மகன் அபிஜித்:ஜனாதிபதி தேர்தலில் தன் வெற்றி நிச்சயம் என, என் தந்தை ஆரம்பம் முதலே நம்பிக்கை தெரிவித்து வந்தார். ஜனாதிபதியாக அவர் தன் பணியை நடுநிலையுடன் செய்வார். இந்திரா காந்தி, நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோருடன் பணியாற்றியவர் என்பதால், அவருக்கு நிறைய அனுபவம் உண்டு.
மகள் ஷர்மிஷ்டா:எனது தந்தை வகித்து வந்த அனைத்து பதவிகளிலும் நேர்மையுடன் செயல்பட்டு வந்துள்ளார். அப்பதவிகளில் பொறுப்புடனும், தனது கடமைகளை நிறைவேற்றியுள்ளார். எனவே, தற்போது ஜனாதிபதியாகவும், அவர் திறமையாக செயல்பட்டு, அப்பதவிக்கு புதிய பரிமாணத்தை உருவாக்குவார் என்பது உறுதி. அவர் மீது எந்த முறைகேடுகளும் இல்லை.
வாழ்த்து : பிரணாப் முகர்ஜியின் வீடு, டில்லி தல்கோத்ரா சாலையில் உள்ளது. இந்த வீட்டிற்கு, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முதலில் வந்து, பிரணாப்பிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். நேரம் கழித்து வந்தால், கூட்டம் வந்து விடும் என்பதால், முதலில் வந்தேன் என, கெலாட் கூறினார். அவரை தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி, மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் பதங் ராவ் காதம் ஆகியோரும், பிரணாப்பை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
