உ.பி.,யில் ஆறாம் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது:மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அறையில் தண்ணீர் புகுந்தது

லக்னோ:உ.பி.,யில் ஆறாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. மீரட், காஜியாபாத் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள 68 தொகுதிகளுக்கு, நாளை தேர்தல் நடக்கிறது.

உ.பி., சட்டசபை தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கின்றன. ஐந்து கட்ட தேர்தல்கள் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், ஆறாம் கட்ட தேர்தல், 68 தொகுதிகளில் நாளை (பிப். 28) நடக்கிறது. காஜியாபாத், மீரட், கவுதம் புத்தா நகர், பிரபுத்தா நகர், அலிகார், மதுரா, ஆக்ரா உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இந்த தேர்தல் நடக்கிறது.

பிரசாரம் ஓய்ந்தது
இதையொட்டி, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, அரசியல் கட்சிகளால் இங்கு மேற்கொள்ளப்பட்ட அனல் பறக்கும் பிரசாரம், நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. ஆறாம் கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகள், அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக்தள் கட்சிக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள்.தேர்தல் அதிகாரி அனிதா மெஸ்ராம் கூறுகையில், ஆறாம் கட்ட தேர்தலில், 2.17 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்கவுள்ளனர். இதற்காக, 22 ஆயிரத்து 137 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடப்பதை உறுதி செய்யும் வகையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

தண்ணீர் புகுந்தது:
இதற்கிடையே, லக்னோ மாவட்டத்தில் உள்ள சரோஜினி நகர் மற்றும் மோகன்லால்கஞ்ச் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலின் போது, பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், இங்குள்ள அரசு பாலிடெக்னிக்கில் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தன. அந்த அறைக்குள் தண்ணீர் புகுந்து விட்டதாக, அப்பகுதி வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, இதுபற்றி கருத்துத் தெரிவித்த தேர்தல் ஆணையம், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் தண்ணீர் புகுந்தாலும், இயந்திரங்கள் பாதிக்கப்பட்ட குறைந்த அளவே வாய்ப்புகள் உள்ளன. இருந்தாலும், வேட்பாளர்கள் முன்னிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணைய அதிகாரிகள் பரிசோதிப்பர் என, தெரிவித்தது.

பா.ஜ.,வில் 55 முதல்வர் வேட்பாளர்கள்:
உ.பி., மாநிலம் பிலிபிட் லோக்சபா தொகுதி எம்.பி.,யும், பா.ஜ., இளம் தலைவருமான வருண், சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்யவில்லை.

இந்நிலையில், பிலிப்பிட்டுக்கு நேற்று வந்திருந்த வருண் கூறுகையில், உ.பி.,யில் பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளருக்கு தகுதியான தலைவர்கள் 55 பேர் உள்ளனர். தேர்தல் முடிவுகளில், பா.ஜ.,வுக்கு சாதகமாக எந்தவித அற்புதமும் நிகழப் போவது இல்லை. இந்த தேர்தலில், சமாஜ்வாடி கட்சி, தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்பது என் கணிப்பு. பா.ஜ., உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் கிடைக்கும் என்று தெரியாது என்றார்.

வருணின் இந்த கருத்து, பா.ஜ., வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ., செய்தி தொடர்பாளரான சயீது நக்வி கூறுகையில், தேர்தல் முடிவுகளை கணிப்பதில் வருண் நிபுணர். அந்த அடிப்படையில் தான், அவர் கருத்து தெரிவித்துள்ளார். பா.ஜ., தலைவர்களில் ஒருவர் என்ற அடிப்படையில், அவர் அதை கூறவில்லை என்றார்.