ஈரோடு: தமிழக முதல்வர் சமீபத்தில் பல்வேறு வழித்தடங்களில் துவக்கிவைத்த
அரசு பஸ்களை இயக்க, டிரைவர்கள் இல்லை. அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின்,
பஸ் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டது. பொதுமக்கள் வசதிக்காக, கூடுதல்
பஸ்கள் வழங்கவும் அரசு உத்தரவிட்டது.ஜூன் 19ம் தேதி, 304 புதிய பஸ்கள்
மற்றும் 266 புனரமைக்கப்பட்ட பஸ்களை, சென்னையில் இருந்தபடி முதல்வர்
ஜெயலலிதா இயக்கி வைத்தார். கோட்டம் வாரியாக, 21 பஸ்கள் முதல் அதிகபட்சமாக,
155 பஸ்கள் வரை வழங்கப்பட்டன. எனினும், அந்த பஸ்களை இயக்க டிரைவர்கள்
இல்லாமல், போக்குவரத்து கழகங்கள், திக்கு முக்காடி வருகின்றன.
ஏற்கனவே, அரசு போக்குவரத்துக் கழகங்களில், டிரைவர் பற்றாக்குறையால், மூன்று
முதல், அதிகபட்சமாக, 10 பஸ்கள் வரை, டிப்போக்களில் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளன. தவிர, தமிழகம் முழுவதுமாக, விபத்து வழக்குகளில் சிக்கி,
நீதிமன்றங்களால் ஜப்தி செய்யப்பட்ட பஸ்கள், சமீபத்தில் போக்குவரத்து
கழகத்தால் மீட்கப்பட்டன. இந்த பஸ்களின் டிரைவர்களே, கடந்த காலங்களில்,
பதிலி டிரைவர்களாக இருந்துள்ளனர்.
இப்போது, ஜப்தி பஸ்கள் மீட்கப்பட்டதால்,
டிரைவர், கண்டக்டர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இப்பிரச்னையைப் போக்க,
டிரைவர்களுக்கு கூடுதல் பணி வழங்கியும், விடுப்பு வழங்காமலும்
சமாளிக்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும், 560 புதிய பஸ்கள் வழங்கப்படுவதால் மகிழ்ச்சியடைந்த
போக்குவரத்து கழகம், அவற்றை இயக்க போதிய டிரைவர், கண்டக்டர் இல்லாமல்
தவிக்கிறது. இதனால், டிப்போக்களில் சராசரியாக, எட்டு முதல் பத்து பஸ்கள்
இயக்கப்படாமல் வீணாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.முதல்வர் துவக்கி வைத்தார்
என்பதால், பிரச்னை வராமல் இருக்க, ஏற்கனவே இயங்கிவந்த பஸ்களை டிப்போக்களில்
நிறுத்திவிட்டு, அதன் டிரைவர், கண்டக்டர்களை கொண்டு, புதிய பஸ்களை
இயக்கப்படுகின்றன. அரசு சமீபத்தில், போக்குவரத்து கழகத்தில் உள்ள, 16
ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என, அறிவித்தது. இதன்படி, பணியாளர்களை
விரைந்து நியமித்தால் மட்டுமே முழுமையாக பஸ்களை இயக்க முடியும்.
