பாரம் தூக்கும் தொழிலாளர் ஸ்டிரைக் : குடோன்களில் தேயிலை தூள் தேக்கம்

குன்னூர் :குன்னூரில் தேயிலை பாரம் தூக்கும் தொழிலாளர்களின் ஸ்டிரைக் நீடிப்பதால்,தேயிலை வர்த்தகம் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி தேயிலை தொழிற்சாலையில் உற்பத்தியாகும் தேயிலை தூள், குன்னூர் தேயிலை ஏல மையங்கள் மூலம் விற்கப்படுகிறது. குன்னூரில் உள்ள 15 வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து தேயிலை தூள் வாங்கி, உள்நாடு, ஏற்றுமதி வர்த்தகத்துக்கு அனுப்பி வைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
குடோன்களில் இருந்து தேயிலை தூள் மூட்டைகளை ஏற்றி, இறக்கும் பணியில், 204 பாரம் தூக்கும் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். தேயிலை வரத்து அதிகரிக்கும் காலங்களில் தினமும் 40 லாரிகளிலும்,தேயிலை வரத்து குறைந்துள்ள காலங்களில் அன்றாடம் 10 லாரிகளில் தேயிலை தூள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
லாரிகளில் தேயிலை தூள் மூட்டை ஏற்றி, இறக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ரோடு டிரான்ஸ்போர்ட் சங்கத்தினர் சம்பளம் வழங்குகின்றனர்.டன்னுக்கு 75 ரூபாய் கூலி பெறும் பாரம் தூக்கும் தொழிலாளர்கள், டன்னுக்கு 200 ரூபாய் வழங்க வலியுறுத்துகின்றனர்.
தொழிலாளர் நல ஆய்வாளர், குன்னூர் டி.எஸ்.பி., உட்பட அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பல சுற்று பேச்சு வார்த்தையில், டன்னுக்கு 100 ரூபாய் வழங்க, ரோடு டிரான்ஸ்போர்ட் சங்கத்தினர் ஒத்துக் கொண்டனர். ஏற்க மறுக்கும், பாரம் தூக்கும் தொழிலாளர்கள் 110 ரூபாய் வழங்குமாறு வற்புறுத்தி வருகின்றனர்.

பாரம் தூக்கும் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் செல்வம் கூறுகையில், தற்போதைய சம்பள அடிப்படையில், ஒவ்வொரு தொழிலாளிக்கும் தலா 150 ரூபாய் மட்டுமே கிடைக்கும்; தற்போதைய விலைவாசி அடிப்படையில், 150 ரூபாய் என்பது குடும்பம் நடத்த போதுமானதாக இல்லை. டன்னுக்கு 110 ரூபாய் கிடைத்தால் ஒவ்வொருவரும் தலா 300 ரூபாய் பெறுவோம்; பொருளாதார சுமை ஓரளவு குறையும், என்றார்.
ரோடு டிரான்ஸ்போர்ட் சங்க செயலாளர் சேகர் கூறுகையில், பாரம் தூக்கும் தொழிலாளர்களுக்கு நாங்கள் நேரடியாக சம்பளம் வழங்குவதில்லை. ஒப்பந்த அடிப்படையில், தேயிலைத் தூளை வாங்குவோர், விற்போரிடம் தொகை பெற்று, பாரம் தூக்கும் தொழிலாளர்களுக்கு வழங்கி வருகிறோம். தற்போதைய சம்பளத்தில் 30 சதவீதம் கூடுதலாக வழங்க முன்வந்துள்ளோம், என்றார்.
சம்பள பேச்சு வார்த்தையில் தொடர் இழுபறி நீடிப்பதால், இரண்டாவது நாளாக பாரம் தூக்கும் தொழிலாளர்களின் ஸ்டிரைக் தொடர்கிறது; இதனால், தேயிலை வர்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.