பிரேசில் பார்முலா-1: மார்க் வெப்பர் சாம்பியன்

சாவோ பவுலோ:

பிரேசிலில் நடந்த பார்முலா-1 கார்பந்தயத்தில், ரெட்புல் ரெனால்ட் அணியின் மார்க் வெப்பர் சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த ஆண்டின் 19வது மற்றும் கடைசி கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1 கார்பந்தயம் பிரேசிலில் நடந்தது. இதில் சிறப்பாக செயல்பட்ட ரெட்புல் ரெனால்ட் அணியின் ஆஸ்திரேலிய வீரர் மார்க் வெப்பர் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். இது இந்த ஆண்டு இவர் கைப்பற்றிய முதலாவது பட்டம். இரண்டாவது இடத்தை ரெட்புல் ரெனால்ட் அணியின் மற்றொரு வீரர் செபாஸ்டியன் வெட்டல் தட்டிச் சென்றார். மூன்றாவது இடத்தை மெக்லாரன்-மெர்சிடஸ் அணியின் இங்கிலாந்து வீரர் ஜென்சன் பட்டம் பிடித்தார்.
மெக்லாரன்-மெர்சிடஸ் அணியின் மற்றொரு இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன், கியர் பாக்ஸில் ஏற்பட்ட கோளாரு காரணமாக பாதியில் விலகினார். போர்ஸ் இந்தியா-மெர்சிடஸ் அணியின் ஜெர்மனி வீரர் அட்ரியன் சுடில், ஆறாவது இடம் பிடித்தார். இந்த அணியின் மற்றொரு வீரர் இங்கிலாந்தை சேர்ந்த பால் டி ரெஸ்டா, 8வது இடம் பிடித்தார்.
இதன்மூலம் இந்த ஆண்டு ரெட்புல் ரெனால்ட் அணியின் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல், 392 புள்ளிகள் பெற்று, சிறந்த டிரைவருக்கான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சிறந்த கார் வடிவமைப்பாளருக்கான பட்டத்தை, ரெட்புல் ரெனால்ட் அணி 650 புள்ளிகளுடன் தட்டிச் சென்றது. இதில் போர்ஸ் இந்தியா-மெர்சிடஸ் அணிக்கு ஆறாவது இடம் கிடைத்தது.