மம்தா பானர்ஜி குறித்து திக்விஜய் சிங் தெரிவித்த கருத்து, காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல. அவரது சொந்த கருத்து, என, காங்கிரஸ் கட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பத்திரிகைகளுக்கோ, தொலைக்காட்சி சேனல்களுக்கோ பேட்டி தரக்கூடாது என்றும் திக்விஜய்சிங்கிற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தவறில்லை: காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ஜனாதிபதி தேர்தல் விவகாரத்தில், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, பக்குவமில்லாமல் செயல்படுகிறார். காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் நடத்திய ஆலோசனை விவரங்களை மீடியாக்களுக்கு தெரிவித்தது, முலாயம் சிங் யாதவுடன் இணைந்து, தன்னிச்சையாக மூன்று பேரின் பெயர்களை அறிவித்தது போன்ற விஷயங்களில், தவறாக செயல்பட்டார். எல்லாவற்றுக்குமே ஒரு எல்லை உள்ளது. தற்போதுள்ள அமீத் அன்சாரியை, மீண்டும் துணை ஜனாதிபதியாக்க வேண்டும். அவர் துணை ஜனாதிபதியாக சிறப்பாக செயல்படுவதால், மீண்டும் அவரை தேர்ந்தெடுப்பதில் தவறு ஒன்றும் இல்லை என, கூறியிருந்தார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், திரிணமுல் காங்., நீடித்து வரும் நிலையில், திக்விஜய் சிங் தெரிவித்த இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில், இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,மம்தா பானர்ஜி குறித்து, திக்விஜய் சிங் தெரிவித்தது, அவரது சொந்த கருத்து. காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல. காங்கிரஸ் கட்சி சார்பில், கருத்துக்களை தெரிவிப்பதற்கு, அவருக்கு எந்த அதிகாரமும் அளிக்கப்படவில்லைஎன, தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையல்ல: அத்துடன் பத்திரிகைகளுக்கோ, சேனல்களுக்கோ எந்தவொரு பேட்டியும் அளிக்க கூடாது என்றும் திக்விஜய்சிங்கிற்கு, காங்கிரஸ் மேலிடம் நேற்று தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. திக்விஜய் சிங், கட்சி மேலிடத்தின் கண்டனத்துக்கு ஆளாவது, இது முதல் முறையல்ல. ஏற்கனவே பாட்லா என்கவுன்டர் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து, கட்சி மேலிடத்தின் கண்டிப்புக்கு ஆளானார்.
- நமது டில்லி நிருபர் -

