சிட்னி: முத்தரப்பு ஒருநாள் தொடரின் முக்கிய லீக் போட்டியில் பேட்ஸ்மேன்கள் சொதப்ப, இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் 87 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து பைனல் வாய்ப்பு மங்கியது. ஆஸ்திரேலிய அணி 19 புள்ளிகளுடன் பைனலுக்குள் ஜோராக நுழைந்தது.
ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. ஆஸ்திரேலிய அணியில் முதுகுப் பிடிப்பு காரணமாக மைக்கேல் கிளார்க் இடம் பெறவில்லை. கேப்டன் பொறுப்பை ஷேன் வாட்சன் ஏற்றார். ரியான் ஹாரிஸ் நீக்கப்பட்டு, கிளின்ட் மெக்கே வாய்ப்பு பெற்றார். இந்திய அணியில் சுழற்சி முறை பார்முலா கைவிடப்பட்டது. சச்சின், சேவக், காம்பிர் ஆகிய மூவரும் இடம் பெற்றனர். ரோகித் நீக்கப்பட்டார். உடற்தகுதி இல்லாததால் ஜாகிர் கான், வினய் குமார் இடம் பெற முடியவில்லை. பிரவீண் குமார், உமேஷ் யாதவ் இடம் பெற்றனர். டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பேட்டிங் தேர்வு செய்தது.
திணறல் துவக்கம்:
ஆஸ்திரேலிய அணி துவக்கத்தில் தடுமாறியது. பிரவீண் குமார் வேகத்தில் வாட்சன்(1) வீழ்ந்தார். கடந்த போட்டியில் சதம் அடித்த பாரஸ்ட் இம்முறை 7 ரன்களுக்கு பிரவீண் பந்தில் போல்டானார். மைக்கேல் ஹசி(10) ரன் அவுட்டாக, 3 விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
வார்னர் அபாரம்:
அடுத்து வந்த டேவிட் ஹசி ஒத்துழைக்க வார்னர் விவேகமாக ரன் சேர்த்தார். அரைசதம் கடந்த வார்னர்(68), ரவிந்திர ஜடேஜா சுழலில் சிக்கினார். இதற்கு பின் மாத்யூ வேட், டேவிட் ஹசி சேர்ந்து அசத்தலாக ஆடினர். இவர்கள் 5வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தனர். அஷ்வின் பந்தை சிக்சருக்கு பறக்க விட்ட வேட், அரைசதம் கடந்தார். இவர் 56 ரன்களுக்கு உமேஷ் யாதவ் வேகத்தில் அவுட்டானார். மீண்டும் பந்துவீச வந்த உமேஷ், இம்முறை டேவிட் ஹசியை(54) வெளியேற்றி, திருப்புமுனை ஏற்படுத்தினார். இரண்டு முக்கிய விக்கெட்டுகள் விரைவாக வீழ்ந்ததால், ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் வேகம் சரிந்தது. சேவக்கும் துல்லியமாக பந்துவீச, ரன் வறட்சி ஏற்பட்டது. பிரட் லீ(4) உள்ளிட்ட டெயிலெண்டர்கள் சோபிக்கவில்லை. கிறிஸ்டியன் 24 ரன்கள் எடுத்தார். இந்திய வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீச, கடைசி 10 ஓவர்களில் 47 ரன்கள் மட்டும் எடுக்கப்பட்டன. ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்தது.
விக்கெட் மடமட:
சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணி எடுத்த எடுப்பிலேயே திணறியது. இப்போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயம் என்பதை மறந்த டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக ஆடினர். வீராப்பு பேசும் சேவக்(5), மீண்டும் ஏமாற்றினார். ஹில்பெனாஸ் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்த சச்சின்(14) சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட்டானார். மெக்கே பந்தில் காம்பிர்(23) போல்டானார். காயத்தில் இருந்து மீண்ட வாட்சன் கலக்கினார். இவரது பந்துவீச்சில் கோஹ்லி(21), ரெய்னா(8) அவுட்டாகினர். ரவிந்திர ஜடேஜா(8) நிலைக்கவில்லை.
தோனி மந்தம்:
ஒருபக்கம் விக்கெட் சரிய, மறுபக்கம் ஆமை வேகத்தில் ஆடிய கேப்டன் தோனி(14 ரன், 49 பந்தில்), ஹில்பெனாஸ் பந்தில் பெவிலியன் திரும்பினார். போராடிய அஷ்வின்(26), தோகர்டி சுழலில் நடையை கட்டினார். ஹில்பெனாஸ், பிரட் லீ பந்துகளை சிக்சருக்கு விரட்டிய இர்பான் பதானின்(22) அதிரடி அதிக நேரம் நீடிக்கவில்லை. இந்திய அணி 39.3 ஓவரில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.
ஆட்ட நாயகன் விருதை வார்னர் வென்றார்.
---------
அதிசயம் நிகழுமா
இந்திய அணியின் பைனல் வாய்ப்பு அனேகமாக தகர்ந்து விட்டது. ஆனாலும், ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால், லேசான வாய்ப்பு உள்ளது. தற்போது இலங்கை(15 புள்ளி), இந்திய(10 புள்ளி)அணிகள் முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ளன.
இந்திய அணி அடுத்த போட்டியில்(பிப்., 28) இலங்கைக்கு எதிராக மிகப் பெரும் வெற்றியை போனஸ் புள்ளியுடன் பெற வேண்டும். போனசாக ஒரு புள்ளியை பெற தவறினால், பைனல் வாய்ப்பு கிடைக்காது. அதே நேரம் இலங்கை அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில்(மார்ச் 2) படுதோல்வி அடைய வேண்டும். ரன்ரேட்டிலும் முன்னிலை பெறும்பட்சத்தில் இந்தியாவுக்கு பைனல் வாய்ப்பு கிடைக்கலாம்.
