சென்னை:மண்ணெண்ணெய் கிடைக்காத விரக்தியில், பெண்கள் திடீர் சாலை மறியலில்
ஈடுபட்டனர்.வியாசர்பாடி எம்.ஜி.ஆர்.நகர், எம்.கே.பி.நகர் உள்ளிட்ட
பகுதிவாசிகளின், குடும்ப அட்டைதாரர்களுக்கான அமுதம் நியாய விலை கடை
எம்.கே.பி.நகர் 19வது, கிழக்கு குறுக்குத் தெருவில் உள்ளது. இங்கு, கடந்த
மூன்று மாதங்களாக குடும்ப அட்டைதாரர்களுக்கு, சரிவர மண்ணெண்ணெய்
வழங்கப்படவில்லை. அரசு தரும் மண்ணெண்ணெய் சப்ளை குறைந்ததால், மக்களுக்கு
சரிவர விநியோகிக்கமுடியவில்லை என நியாய விலைக்கடை ஊழியர்கள்
தெரிவித்தனர்.காலி கேன்களுடன்...சமீபத்தில், இக்கடையில் கடந்த, இரண்டு
நாட்களாக மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது. இதனால், மக்கள் நள்ளிரவு
நேரத்தையும் பாராமல் காத்திருந்து, மண்ணெண்ணெய் வாங்கிச் சென்றனர்.
நேற்று அவர்களில் 50க்கும், மேற்பட்டோருக்கு மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை.
கோபம் அடைந்த பெண்கள், எம்.ஜி.ஆர்.நகர் - எம்.கே. பி.நகர் சாலை சந்திப்பில்
மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து
பாதிக்கப்பட்டது. பெண்களுடன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் பேச்சு
நடத்தி மண்ணெண்ணெய் கிடைக்க, வழி செய்வதாக உறுதி அளித்தார்.
பற்றாக்குறைமீண்டும், அமுதம் நியாய விலைக் கடைக்கு சென்ற, மண்ணெண்ணெய்
கிடைக்காத பெண்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. நியாய விலை கடை ஊழியர்கள்
தெரிவிக்கையில், இங்கு மொத்தம் ஒரு மாதத்துக்கு 24ஆயிரத்து 400 லிட்டர்
மண்ணெண்ணெய் தேவை. கடந்த மாதம் 16 ஆயிரத்து 400 லிட்டர் மட்டுமே சப்ளை
தரப்பட்டது.அதற்கு முந்தைய மாதம் 19ஆயிரம் லிட்டர் சப்ளையானது. முந்தைய மாத
பற்றாக்குறையையே சமாளிக்க முடியவில்லை. இதில், கடந்த மாதமும் பற்றாக்குறை,
இம்மாதமும் பற்றாக்குறை என்றால், எப்படி சமாளிப்பது, என்றனர்.
