பெங்களூரு:ஜெயலலிதா, சசிகலா சொத்து குவிப்பு வழக்கை விசாரித்து வரும், நீதிபதி மல்லிகார்ஜுனய்யா நியமனம் சரியா? தவறா? என்று, ஜூலை 17ம் தேதி, தீர்ப்பு வழங்குவதாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கைமூன்றாண்டுகளாக விசாரித்து வரும் நீதிபதி மல்லிகார்ஜுனய்யாவை நியமிக்கும் போது, அரசு ஆணை வெளியிடவில்லை. எனவே, இந்த வழக்கை விசாரிக்க அவருக்கு அதிகாரம் இல்லை என, ஜெ., சசி., உட்பட நான்கு பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதானவிவாதம் நேற்று நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன்னிலையில் நடந்தது.
அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா: உச்சநீதிமன்ற உத்தரவின் படி கர்நாடக அரசும், உயர்நீதிமன்றமும் இணைந்து, முதலில் ஒரு நீதிபதியை நியமித்தனர். அந்த நீதிபதி ஓய்வு பெற்ற பிறகு, புதிய நீதிபதியை நியமிக்க, மீண்டும் அரசு ஆணை தேவையில்லை. உச்சநீதிமன்றம் அடுத்த நீதிபதியை நியமிக்க அதிகாரம் உள்ளது. இது போல் உச்ச நீதிமன்றத்திலும், கோல்கட்டாநீதிமன்றத்திலும், கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் பல வழக்குகள்நடந்த முன் உதாரணங்கள் உள்ளன.
இந்த மனு தேவையற்றது. இந்த வழக்கை தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. மனுவை தள்ளுபடி செய்துவிட்டு, வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலாவிடம், சட்டவிதி, 313 படி தொடந்து கேள்விகள் கேட்டு, உச்சநீதிமன்ற உத்தரவின் படி வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்.
வழக்கை தாமதப்படுத்த இந்த மனு தாக்கல் செய்யவில்லை. சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்க, கண்டிப்பாக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். ஆனால், மல்லிகார்ஜுனய்யா
நியமனத்தில் அதை கடைபிடிக்கவில்லை என்று, ஜெ., சசி., வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர்.
இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, இரு தரப்பினரும் தங்கள் ஆதாரங்களை வலுவாக எடுத்து வைத்துள்ளனர். உடனடியாக தீர்ப்பு வழங்க இயலாது. எனவே, ஜூலை 17ம் தேதி, இந்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைக்கிறேன் என்றார்.
