கூடலூர்:முதுமலையில் வன உயிரினங்களின் உணவு தேவை பூர்த்தி
செய்யப்பட்டுள்ளதால், பிற பகுதிகளில் இருந்து ஏராளமான வன விலங்குகள் வந்த
வண்ணம் உள்ளன.முதுமுலை புலிகள் காப்பகத்தில் கோடையில் ஏற்பட்ட கடும்
வறட்சி, வனத்தீ காரணமாக வன விலங்குகளுக்கு கடும் உணவு, தண்ணீர் தட்டுப்பாடு
ஏற்பட்டது. இதனால், வன விலங்குகள் பிற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தன.
முதுமலையும் மூடப்பட்டது. இதன்பின், கோடை மழை ஒரளவு பெய்ததால் வறட்சி
மறைந்து, பசுமையான காலநிலை ஏற்பட்டது. இதனால், மே மாதம் 3ம் தேதி முதுமலை
திறக்கப்பட்டது.
எனினும், வன விலங்குகளின் நடமாட்டம் குறைந்தது.
தற்போது பருவ மழை பெய்து, நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்,
பல்வேறு இடங்களிலும் இருந்தும் வன விலங்குகளின் கூட்டம் முதுமலையை
முற்றுகையிட்டு வருகின்றன. புலிகள் காப்பகத்தின் அனைத்து இடங்களிலும் யானை,
காட்டெருமை, மான் உட்பட பல்வேறு விலங்கினங்களை காணும் சுற்றுலா பயணிகள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல்,
அவற்றை ரசித்து செல்ல வேண்டும், என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
