மதுரை கைதிகள் 10 பேர் 5 சிறைகளுக்கு மாற்றம்

மதுரை: தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன் கொலை வழக்கில், மதுரை சிறையில் இருந்த 10 பேர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தலா இருவர் வீதம் 5 சிறைகளுக்கு, மாற்றப்பட்டனர். ஜன., 10ல், திண்டுக்கல்லில் பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக, மதுரை சிறையில் 10 பேர் அடைக்கப்பட்டனர். இவர்களின் பாதுகாப்பு கருதி, வேறு சிறைகளில் இடம் மாற்ற உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதற்கிடையே, வழக்கு ஒன்றில் பாளையங்கோட்டை சிறையில், பசுபதிபாண்டியன் ஆதரவாளர் மாரியப்பன் என்பவர் அடைக்கப்பட்டார். அவர் சிறை விதிகளுக்கு முரணாக நடந்ததால், மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார். நேற்று, சிறை மருத்துவமனையில் மாரியப்பன் சிகிச்சை பெற வந்தார். அப்போது, பசுபதிபாண்டியன் கொலையில் தொடர்புடையதாக கருதப்படும், அருளானந்தம், ஆறுமுகசாமி வயிற்றுவலிக்கு சிகிச்சை பெற வந்தனர். அப்போது, இவர்களுக்குள் மோதும் சூழல் ஏற்பட்டது. காவலர்கள் சமரசம் செய்தனர். இத்தகைய சம்பவம் நடக்காமல் இருக்க, இன்று 10 பேரையும், சென்னை, சேலம், வேலூர், கடலூர், கோவை சிறைகளுக்கு தலா, 2 பேர் வீதம் சிறை நிர்வாகம் இடம் மாற்றியது.