திருவள்ளூர்:முதல்வர் ஜெயலலிதாவின், 64வது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு
வனத்துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், ஒரு லட்சத்து, 75
ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ரமணா
நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.தமிழகத்தின் பசுமைப் போர்வையை
அதிகரிக்கவும், சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கவும், மாபெரும் மரக்கன்றுகள்
நடும் திட்டம் (2011-12) துவக்கப்படும் என, மாநில சுற்றுச்சூழல் துறை
அமைச்சர் ரமணா அறிவித்திருந்தார்.
இத்திட்டத்தின்படி, மரக்கன்றுகள் நடும் விழா, நேற்று முன்தினம்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள மாவட்ட வனத்துறை
அலுவலகத்தில் நடந்தது.
இவ்விழாவுக்கு, திருவள்ளூர் கலெக்டர் ஆஷிஷ் சட்டர்ஜி தலைமை வகித்தார்.
சென்னை மண்டல வன பாதுகாவலர் கல்யாண சுந்தரம் முன்னிலை வகித்தார்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ரமணா மாவட்ட வன அலுவலகம் எதிரில் மரக்கன்றுகளை
நட்டு திட்டத்தினை துவக்கி வைத்தார்.இவ்விழாவில், திருவள்ளூர் எம்.பி.,
வேணுகோபால், பூந்தமல்லி எம்.எல்.ஏ., மணிமாறன், நகராட்சித் தலைவர் பாஸ்கரன்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.
