பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாட்களில் தான் எப்போதுமே ஜனாதிபதி தேர்தல் நடப்பது வழக்கம். ஆனால், வரலாற்றிலேயே முதல் முறையாக, கூட்டத் தொடர் நடக்காத நேரத்தில், ஜனாதிபதி தேர்தல் நடைபெறப் போகிறது. இதனால், நிலைக்குழு அல்லது ஆலோசனைக் குழு போன்ற கூட்டங்களை அந்த நாளில் கூட்டி, எம்.பி.,க்கள் எல்லாரையும் ஒருசேர டில்லிக்கு வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலுக்கான முஸ்தீபுகளில், முக்கிய அரசியல் கட்சிகள் எல்லாம் தீவிரமாக உள்ளன. பிரணாப் முகர்ஜியை நிறுத்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆதரவு கேட்கிறது. இவரை எதிர்த்து நிற்கும் சங்மாவுக்காக பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அரசியல் கட்சிகள் எல்லாம் அவரவர் தரப்புக்கு ஆதரவு திரட்ட துவங்கியுள்ள நிலையில், தேர்தலை சிறப்பாக நடத்தி முடிக்கும் பொறுப்பை சுமந்து கொண்டிருக்கும் அதிகாரிகளும், இன்னொரு பக்கம் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளனர்.
வழக்கம்:ஜனாதிபதி தேர்தல் என்பது, எப்போதுமே ஜூலை மாதங்களில் தான் பெரும்பாலும் நடைபெறும். அந்த சமயத்தில், பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும். பட்ஜெட் கூட்டத் தொடருக்காக மே மாதம் வரை பணியாற்றி சற்று இடைவெளியுடன் ஓய்வு பெற்றுக் கொண்டு, மீண்டும் ஜூலை மூன்றாவது வாரம் வாக்கில் துவங்குவது, பார்லிமென்டின் வழக்கம். மழைக்கால கூட்டத் தொடராக கருதப்படும், இந்த தொடர் ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரம் வரை நடைபெற்று முடிவுக்கு வரும். எனவே, ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலுமே பார்லிமென்ட் இயங்கும் சமயங்களில் தான் நடைபெற்று வந்துள்ளது.
கூட்டம் நடக்கவில்லை:கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, எம்.பி.,க்கள் எல்லாரும் டில்லியில் இருப்பர். அப்படியே ஜனாதிபதி தேர்தலிலும் ஓட்டுப்போட்டு தங்களது ஜனநாயக கடமையை சிரமம் இன்றி, நிறைவு செய்வர். ஆனால், இம்முறை அப்படி இல்லை. வழக்கத்துக்கு மாறாக இந்த ஜனாதிபதி தேர்தலின்போது, பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடைபெறாது. அத்துடன் பார்லிமென்ட் எப்போது கூடும் என்பது குறித்துஎந்த தகவலும் இல்லை. பொதுவாக நிதியமைச்சரும், லோக்சபா சபை முன்னவருமான பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், பார்லிமென்ட் விவகார அமைச்சர் பவன்குமார் பன்சால் ஆகியோர் கூடிப்பேசிதான் தேதியை நிர்ணயம் செய்வர். இந்த ஆலோசனை கூட்டம் இதுவரை நடைபெறவில்லை.
இருப்பினும், ஜூலை நான்காவது வாரத்தில், பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் துவங்கும் என, தெரிகிறது. அனேகமாக துணை ஜனாதிபதி தேர்தல், அந்த கூட்டத் தொடரின்போது நடைபெறலாம். பார்லிமென்ட் கூட்டத்தொடர் தாமதமாக கூட்டப்படுவதன் பின்னணி, ஜனாதிபதி தேர்தலா அல்லது அரசியல் சூழ்நிலைகளா என்ற விவரம் விரைவில் தெரிய வரும்.
வரவழைக்க யோசனை:ஜனாதிபதி தேர்தல், ஜூலை 19ல் நடைபெறுகிறது என்பதால், அன்றைய தினம் எம்.பி.,க்கள் அனைவரும் டில்லியில் இருந் தாக வேண்டும். பார்லிமென்ட் கூட்டத்தொடரும் இல்லாத சமயமாக இருப்பதால், இம்முறை எம்.பி.,க்களை டில்லிக்கு ஒருசேர வரவைப்பதற்கான வேறு சில யோசனைகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பொதுவாக கூட்டத்தொடர் நடக்காத சமயங்களில், நிலைக்குழு கூட்டங்கள் அல்லது ஆலோசனைக்குழு கூட்டங்கள் பார்லிமென்டில் நடத்தப்படும்.இதில் பங்கேற்பதற்காக சம்பந்தப்பட்ட எம்.பி.,க்கள் மட்டும் டில்லிக்கு வந்து கூட்டத்தில் கலந்துவிட்டு ஊர் திரும்புவர்.அதேபோல, ஜூலை 19ம் தேதி நிலைக்குழு மற்றும் ஆலோசனைக்குழு கூட்டங்களை கூட்டலாமா என்ற யோசனை தீவிரமாக உள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம், டில்லிக்கு வந்து செல்வதில், எம்.பி.,க்களுக்கு பெரிதும் சிரமம் இருக்காது. ஓட்டுப்பதிவு தினம் மற்றும் அதற்கு முந்தைய தினம், அடுத்த தினம் ஆகிய நாட்களில் அனைத்து எம்.பி.,க்களுக்குமே நிலைக்குழு கூட்டம் அல்லது ஆலோசனை குழு கூட்டம் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மாற்று ஏற்பாடு:தவிர, டில்லி வந்து, பார்லிமென்ட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளஓட்டுச் சாவடியில் ஓட்டுப்போட முடியாத நிலை சில எம்.பி.,க்களுக்கு ஏற்படலாம். அத்தகைய எம்.பி.,க்கள் தத்தமது மாநிலங்களின் தலைமை செயலங்களில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டுப்போட விரும்புவர். அவ்வாறு விரும்பும் எம்.பி.,க்கள், முன்கூட்டியே, இதற்காக தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என்பதால், அதற்கான ஏற்பாடுகளும் தீவிரம் பெற்றுள்ளன. ஓட்டுப்பதிவும் ஓட்டு எண்ணிக்கையும் பார்லிமென்ட் வளாகத்தின், அறை எண் 63லேயே நடைபெற உள்ளது.
வரும் 28ல் மனு தாக்கல்:ஐ.மு., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி, வரும் 28ம் தேதி, தன் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். அதற்கான முன்னேற்பாடுகளுக்கான அறிவுரை பார்லிமென்ட் செயலகத்துக்கு வந்து விட்டது. பிரணாப் வேட்புமனு தாக்கல் செய்யும் அன்றைய தினம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முக்கிய தலைவர்கள் அனைவரும் உடன் இருப்பர். அத்துடன், பிரணாபை ஆதரிக்கும் பிற முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கலில் கிருஷ்ணகிரியும், மேட்டூரும்:ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், கடந்த 16ம் தேதியே துவங்கி விட்டது. இதுவரை, 13 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் அனைவருமே சுயேச்சைகளாக தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு மூன்று நிபந்தனைகள் முக்கியமானவை. வாக்காளர் பட்டியலில், மனுதாரரின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். 15 ஆயிரம் ரூபாய் வரை டெபாசிட் செலுத்தப்பட வேண்டும். கணிசமான எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவும் இருந்திட வேண்டும்.தமிழகத்தில் இருந்து கிருஷ்ணகிரியைச் சேர்ந்த இலியாஸ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இவரது பெயர் இடம் பெற்ற வேட்பாளர் பட்டியல் நகல் அளிக்காத காரணத்தால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. மேட்டூரைச் சேர்ந்த பத்மராஜா என்பவரும் நேற்று மனு தாக்கல் செய்தார். எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு சான்றிதழை இவர் அளிக்கவில்லை. எனவே, வரும் ஜூலை 2ம் தேதி நடைபெறும் வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது, இவரது மனு நிராகரிக்கப்படலாம்.
- நமது டில்லி நிருபர் -

