தேடல்

தமிழக நீதிமன்றங்கள் "ஜப்தி' செய்த 80 சதவீத அரசு பஸ்கள் மீட்பு

சேலம் : விபத்து இழப்பீடு தொகை செலுத்தாததால், தமிழக நீதிமன்றங்களால்,

ஜப்தி செய்யப்பட்ட பஸ்களில், 80 சதவீதம் பஸ்கள், இழப்பீடு தொகை செலுத்தி

மீட்கப்பட்டுள்ளது. மே 15ம் தேதி, தமிழக சட்டசபையில், போக்குவரத்து மானியக்

கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய முதல்வர், விபத்துக்களை ஏற்படுத்தி,

இழப்பீடு வழங்காமல், நீதிமன்றங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்களை

மீட்டு, போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, நீதிமன்றங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 210 பஸ்களை மீட்க,

13.91 கோடி ரூபாயை அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. அதில், 50 சதவீதம் தொகை

அரசால் வழங்கப்பட்டது. அத்துடன், மீதமுள்ள தொகையை, அந்தந்த போக்குவரத்து

கோட்டங்களே வழங்கி, தமிழக நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்ட பஸ்களுக்கு

செலுத்தி, மீட்கப்பட்டிருக்கின்றன. ஜூன் முதல் வாரம் வரை, தமிழகம்

முழுவதும் நீதிமன்றங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களில், 165

பஸ்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் தற்போது எப்.சி., செய்யப்பட்டு,

மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது குறித்து

போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழக அரசு ஒதுக்கிய

நிதியுடன், போக்குவரத்துக் கழகங்களின் பங்கு தொகையை செலுத்தி,

நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டிருந்த, 165 பஸ்களை (80 சதவீதம்)

மீட்டுள்ளோம். மீதமுள்ள பஸ்களை மீட்க, தேவையான நடவடிக்கைகள்

மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.