தேடல்

தமிழகத்தில் பரவுகிறது பன்றி காய்ச்சல்?தஞ்சை மருத்துவமனையில் பெண் அட்மிட்

தஞ்சாவூர்:ஒரத்தநாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு, பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பதாக எழுந்த பீதியில், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக, அப்பெண் அனுமதிக்கப்பட்டார்.தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நடராஜ். இவரின் மனைவி ஜோதி,40; ஒரு வாரமாக கடுமையான காய்ச்சலில் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து, பட்டுக்கோட்டையில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பயனளிக்காமல், தஞ்சையிலுள்ள ரைட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக, இரண்டு நாட்களுக்கு முன் ஜோதியை சேர்த்தனர்.அங்கு ஜோதியின் ரத்தத்தை, டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தனர். இதில், பன்றிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறியாக, எச் 1, என் 1 வைரஸ் பாதித்திருப்பதாக, தனியார் டாக்டர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, டாக்டர்கள் பரிந்துரையின்படி, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, நேற்று அதிகாலையில் ஜோதி சேர்க்கப்பட்டார். இதை தொடர்ந்து, மருத்துவமனையிலுள்ள பன்றிக்காய்ச்சல் நோய்க்கான சிறப்பு சிகிச்சை பிரிவில், ஜோதியை அனுமதித்து, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.