தேடல்

முத்தையாபுரம், சங்கரப்பேரியில் மண்டல அலுவலகம் கட்டடம் அமைவது குறித்து தொழில் நுட்ப ஆலோசகர் ஆய்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி மண்டல அலுவலகம் அமையும் பகுதியை

தொழில் நுட்ப ஆலோசகர் நேற்று வந்து பார்வையிட்டார். கட்டடம் எந்த முறையில்

அமைய வேண்டும் என்பது குறித்து முழு அளவில் சர்வே மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் அமைய உள்ள நான்கு மண்டலங்களுக்கு ஏற்கனவே

இரண்டு மண்டலங்களுக்கு அலுவலகம் தயார் நிலையில் உள்ளது. முத்தையாபுரம்

மற்றும் சங்கரப்பேரியில் அமைய உள்ள மண்டல அலுவலகத்திற்கு தான் கட்டடம்

இல்லை.

இந்த இரண்டு இடங்களிலும் அலுவலகம் கட்டுவதற்கு ஒரு கோடி ரூபாய் அரசு

அனுமதியளித்தது. தூத்துக்குடி மாநகராட்சி பொதுநிதியில் இருந்து 20 லட்ச

ரூபாய் போடப்பட்டு மொத்தம் ஒரு மண்டல அலுவலகம் 60 லட்ச ரூபாய் செலவில்

இரண்டு அலுவலகம் ஒரு கோடியே 20 லட்சத்தில் கட்டப்படுகிறது.

இதற்காக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசிடம்

ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை எத்தகையை வடிவமைப்பில் நவீன

தொழில் நுட்பத்துடன் பிரமாண்டமாக அமைக்கலாம் என்பது குறித்து மாநகராட்சி

மேயர் சசிகலாபுஷ்பா, கமிஷனர் மதுமதி, இன்ஜினியர் ராஜகோபாலன் மற்றும்

மாநகராட்சி இன்ஜினியர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கட்டட ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கும் வகையில் கட்டடம்

அமைவது குறித்து தொழில்நுட்ப ஆலோசகர் கட்டடம் அமையும் முத்தையாபுரம்

ஜெ.எஸ்.நகர் பகுதி, சங்கரப்பேரியில் மாநகராட்சி காலியிடம் அமைந்துள்ள பகுதி

ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

மாநகராட்சி இன்ஜினியர்கள் பிரின்ஸ், ராமச்சந்திரன், நாகராஜன் மற்றும்

அலுவலர்கள் உடன் சென்றனர். எந்த வகையில் கட்டடம் அமைய வேண்டும். அதில் உள்ள

வசதிகள், அந்த கட்டடத்திற்கு ஏற்ப இடத்தின் அமைப்பு உள்ளதா என்பது

குறித்து முழுமையாக சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக தொழில் நுட்ப

ஆலோசகர் ஆய்வு மேற்கொண்டதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.