முத்திரையிடப்படாத எடை கற்கள் பறிமுதல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், முத்திரையிடப்படாத எடைகற்கள், தராசுகள், ஊற்றளவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.காஞ்சிபுரம் மாவட்டத்தில், நுகர்வோருக்கு வழங்கப்படும் பொருட்கள், சரியான எடை மற்றும் அளவில் வழங்கப்படுகிறதா என, தொழிலாளர் துறை அலுவலர்கள், தொழிலாளர் ஆய்வாளர் விமலநாதன் தலைமையில், மாவட்டம் முழுவதும், திடீர் சோதனை நடத்தினர்.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம், புனித தோமையார் மலை பகுதிகளில், பால் வியாபாரிகள், தள்ளுவண்டி, தெருவோர காய்கறி, பழம் விற்பனையாளர்கள் ஆகியோர், எடைபோட பயன்படுத்திய பொருட்கள் சோதனை செய்யப்பட்டன.

அப்போது, வியாபாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட, முத்திரையிடப்படாத மற்றும் தரமற்ற, 104 ஊற்றளவைகள், 92 எடைகற்கள், 15 தராசுகள், ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.வியாபாரிகள் தரசு மற்றும் எடையளவுகளை, உரிய காலத்திற்குள் முத்தரையிட்ட பின்னரே, வியாபார உபயோகத்திற்கு பயன்படுத்த வேண்டும். நுகர்வோரை ஏமாற்றும் வகையில், எடையளவுகளில் ஏதேனும் முறைகேடு செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, விமலநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.