திருச்சி: திருச்சி அருகே பள்ளி மாணவியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த, முன்னாள் ஊராட்சி தலைவர் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சமயபுரம், பி.கே., அக்ரஹாரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு ஜீவா, 17, என்ற மகனும், ரஞ்சிதா, 14, என்ற மகளும் உள்ளனர். ரஞ்சிதா ஆறு மாத கைக்குழந்தையாக இருக்கும்போதே, அவரது தந்தை ரவிச்சந்திரன் விபத்தில் இறந்துவிட்டார்.இதையடுத்து தமிழ்செல்வி, தன் மகள் ரஞ்சிதாவுடன் லால்குடி அருகே வரகுப்பை கிராமத்தில் உள்ள, தன் தந்தை அழகப்பன் வீட்டில் வசிக்கிறார். மகன் ஜீவா மட்டும் தாத்தா வீட்டில் வளர்ந்து வருகிறார். ரஞ்சிதா புள்ளம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
வரகுப்பை முன்னாள் ஊராட்சி தலைவர் பெருமாள் மகன் ரவிச்சந்திரன், 22. இவர், ஏசி மெக்கானிக்காக வேலை பார்க்கிறார். ரஞ்சிதாவை, ரவிச்சந்திரன் ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அவரது காதலை ரஞ்சிதா ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஞ்சிதா வழக்கம்போல் நேற்று காலை வரகுப்பை பஸ் நிறுத்தத்தில், பள்ளி செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த ரவிச்சந்திரன், ரஞ்சிதாவை கழுத்து, தலை ஆகிய இடங்களில் வெட்டிவிட்டு, அங்கிருந்து ஓடினார்.
ரஞ்சிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். ரஞ்சிதா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக்கொண்டிருந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் ரஞ்சிதா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ரவிச்சந்திரன் ரத்தக்கறை படிந்த அரிவாளுடன் ஓடியதை பார்த்த, அப்பகுதியில் டெய்லர் கடை நடத்தி வரும் மனோகர், இதுகுறித்து, கல்லக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் ரவிச்சந்திரனின் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டனர். ரிங் சென்றது. ஆனால், போனை அவர் எடுக்கவில்லை. சந்தேகமடைந்த போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர்.கதவை திறந்து உள்ளே சென்றபோது, அவர் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அதே அறையில் ரஞ்சிதாவை வெட்டிய அரிவாள் ரத்தக்கறையுடன் கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றினர். ரவிச்சந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக, திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கல்லக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலைக்கு காரணம்முன்விரோதமா? காதலா?
இச்சம்பவம் குறித்து திருச்சி மருத்துவமனைக்கு வந்த வரகுப்பை பகுதி மக்கள் கூறியதாவது:ரஞ்சிதாவின் மூத்த தாய் மாமா தங்கராஜ், தன் மனைவி சித்ராவுடன் சென்னையில் வசித்து வந்தார். தங்கராஜ் மர்மமான முறையில் இறந்தார். அவரை சித்ரா ஆள்வைத்து கொலை செய்தார் என்று தங்கராஜ் குடும்பத்தினர் கருதினர். ரஞ்சிதாவின் தாத்தா அழகப்பன், மருமகள் சித்ராவை வெட்டிக் கொலை செய்தார். அழகப்பன் திருச்சி மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். பழிக்கு, பழி தீர்க்கவே ரஞ்சிதாவை சித்ரா தரப்பினர் கொலை செய்துள்ளனர். ஆனால், போலீசார் வழக்கை சுலபமாக கையாள காதல் என்று கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டுள்ளனர் என்றனர்.
