சென்னை: சிறையில் இருக்கும் மாஜி மத்திய அமைச்சர் ராஜா மீதான புதியதொரு ஊழல் விவகாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. தொலை தொடர்பு துறையில் அமைச்சராக இருந்து ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை விற்று பல லட்சம் கோடியை இழப்பு ஏற்படுத்திய வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவர் மீது சி.பி.ஐ,. புதியதொரு வழக்கை பதிவு செய்து இதற்கான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் களம் இறங்கியிருக்கிறது. விமாக்ஸ் அதிவேக வயர்லெஸ் அகன்ற அலைவரிசை லைன் உரிமம் பி.எஸ்.என்.எல் மூலம் விற்கப்படும். இது விற்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இன்று சி.பி.ஐ., தரப்பில் டில்லி , அம்பாலா, சென்னை, காசியாபாத் உள்ளிட்ட இடங்களில் பி.எஸ்.என்.எல் நிறுவன அதிகாரிகள் மற்றும் சில தனியார் கம்பெனிகள் மற்றும் அதன் முதலாளிகள் வீடுகளில் இன்று அதிரடி சோதனை நடந்து வருகிறது. சென்னையில் உள்ள ஒரு கம்பெனியிலும், ராஜா வீட்டிலும் சி.பி.ஐ., அதிகாரிகள் முற்றுகையிட்டு ரெய்டு நடத்தி வருகின்றனர்.
தகுதி இல்லாத கம்பெனி: சென்னையில் ஸ்டார்நெட் கம்னியூகேஷன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனை நடத்துபவர் ராஜாவுக்கு மிக நெருக்கமாக இருந்தவராம். எந்தவொரு தகுதியும் இல்லாத இந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கிட ராஜா சில அதிகாரிகளை வற்றுபுறுத்தியதாக தெரிகிறது. இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ராஜா மீது மேலும் ஒரு புதிய குற்றச்சாட்டு பதிவாகிறது. இதனால் ஏற்கனவே ஓராண்டுக்கு மேல் சிறையில் இருக்கும் ராஜா ஜாமினில் வெளியே வருவது என்பது முடியாத காரியமாகவே ஆகிவிடும்.
