ரூ.5,000 லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர் உட்பட 2 பேர் கைது

திருவண்ணாமலை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியரை மீண்டும் பணியில் சேர்க்க, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர் மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட மேற்பார்வையாளரை, போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், மேல்செங்கம் அடுத்த பி.எல். தண்டா கிராம டாஸ்மாக் கடையில், மேற்பார்வையாளராக பணிபுரிந்தவர் சங்கர். இவர், கடந்தாண்டு டிசம்பர் 3ம் தேதி பணிக்கு வராததால், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மீண்டும் பணியில் சேர, டாஸ்மாக் மேலாளர் கண்ணையனை அணுகினார். சங்கர் மீண்டும் பணியில் சேர, இடைத்தரகராக செயல்படும் வெறையூர் டாஸ்மாக் கடையில் பணிபுரியும் மேற்பார்வையாளர் பூமிநாதனை அணுகினார்.
அப்போது, 25 ஆயிரம் ரூபாய் கண்ணையனுக்கும், தனக்கு, 5,000 ரூபாயும் தர வேண்டும் என்று, பூமிநாதன் கேட்டுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த சங்கர், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார் தெரிவித்தார்.
போலீஸாரின் ஆலோசனைப்படி, நேற்று திருவண்ணாமலை டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்துக்கு சென்ற சங்கர், கண்ணையனிடம் முதல் தவணையாக, 5,000 ரூபாய் கொடுத்தார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் கண்ணையனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பூமிநாதனையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கண்ணையன், வரும் மார்ச் 31ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற இருந்தார்.