பீஜிங்: அமெரிக்காவின் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்தை தோற்கடிக்கும் வகையில், உலகின் மிகப் பெரிய விமான நிலையத்தை நிர்மாணிக்க, சீனா முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டா நகரில் உள்ள ஹார்ட்ஸ்பீல்டு - ஜாக்சன் சர்வதேச விமான நிலையம்தான், விமானப் போக்குவரத்தில் உலகின் மிகப் பெரிய விமான நிலையம் என கருதப்படுகிறது.
இந்நிலையில், அதையும் தோற்கடிக்கும் வகையில் பீஜிங்கின் தென் கிழக்கில், உலகின் மிகப் பெரிய சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து நிலையம் ஒன்றை அமைக்க சீனா முடிவு செய்துள்ளது.மொத்தம் 15 பில்லியன் டாலர் செலவில் அமையக் கூடிய இந்த நிலையம், பீஜிங்கிற்கும், ஹேபெய் மாகாணத்தின் லாங்பாங் நகருக்கும் இடையில் உள்ள பகுதியில் நிறுவப்படலாம் எனத் தெரிகிறது.
இந்த விமான நிலையத்தில், மொத்தம் ஒன்பது ஓடுபாதைகள் அமைக்கப்படும். ஆண்டுக்கு 13 கோடி பயணிகள் வந்து செல்வர். 55 லட்சம் டன் சரக்குகள் கையாளப்படும்.அதேநேரம் இந்த புதிய விமான நிலையம், நெடுஞ்சாலைகள், சரக்குப் போக்குவரத்து சாலைகள், கிராமப்புறச் சாலைகள் ஆகியவற்றை இணைக்கும் மையமாகவும் திகழும்.பீஜிங்கில் ஏற்கனவே, நான்யுவான் விமான நிலையம் மற்றும் பீஜிங் சர்வதேச விமான நிலையம் என இரண்டு நிலையங்கள் உள்ளன. இவற்றில், பீஜிங் விமான நிலையத்தில், ஆண்டுக்கு ஏழரைக் கோடி பயணிகள் வந்து செல்கின்றனர்.
