மும்பை:
மும்பை மாரத்தான் ஓட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் ராம் சிங் யாதவ், லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.மும்பையில், ஒன்பதாவது சர்வதேச மாரத்தான் ஓட்டம் நேற்று நடந்தது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற ராம் சிங் யாதவ், பந்தைய தூரத்தை இரண்டு மணி நேரம், 16 நிமிடம், 59 வினாடிகளில் கடந்து, 12வது இடம் பிடித்தார். இப்போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். இதன்மூலம், இந்த ஆண்டு லண்டனில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பு பெற்றார். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாட, பந்தைய தூரத்தை 2 மணி நேரம் 18 நிமிடங்களில் கடந்தால் போதுமானது. உ.பி.,யை சேர்ந்த ராணுவ வீரரான இவர், கடந்த 2008ல் மூன்று வினாடிகள் தாமதமாக வந்ததால், பீஜிங் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார். கடந்த ஆண்டு சீனாவின் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 15வது இடம் பிடித்தார்.
இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் இலாம் சிங், பந்தைய தூரத்தை இரண்டு மணி நேரம் 18 நிமிடம் 27 வினாடிகளில் கடந்ததால், லண்டன் ஒலிம்பிக்கில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். முதலிடத்தை கென்யாவின் லபான் மோய்பான் பிடித்தார். இவர், பந்தைய தூரத்தை இரண்டு மணி நேரம், 9 நிமிடம், 44 வினாடிகளில் கடந்தார். பெண்கள் பிரிவில் முதலிடத்தை எத்தியோபியாவின் நெட்சனட் அபேயோ கைப்பற்றினார்.
