தேடல்

வங்கி கணக்கில், "கட்டிங்' தொகை: பதிவாளர் அலுவலகத்தில் கூத்து : டீ கடை பெஞ்சு

""விழா கொண்டாட்டத்துக்கு தயாரான, "மாஜி'யை, "உள்ளே' வைச்சிட்டாங்கன்னு உடன்பிறப்புகள் வருத்தப்படறாங்க பா...'' என, விவாதத்தை துவக்கினார் அன்வர்பாய்.""ஏகப்பட்ட, "மாஜி'க்கள், "உள்ளே'யும், "வெளியே'யும் போய் வந்துட்டு இருக்காளே ஓய்... யாரைச் சொல்றீர்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.""தி.மு.க., தேர்தல் பணிக் குழு செயலர் முபாராக்கின் மகன் திருமணம் வர்ற, 29ம் தேதி திருப்பூரில நடக்குது பா... இதில கலந்துக்க ஸ்டாலின் தேதி கொடுத்திருந்தார்... அதே நாளில், இளைஞரணி அமைப்பாளர்கள் தேர்வு நிகழ்ச்சியையும், மாவட்ட தி.மு.க., அலுவலக திறப்பு விழாவையும் நடத்த, "மாஜி' மந்திரி சாமிநாதன் நேரம் வாங்கியிருந்தார்...""தடபுடலா விழா ஏற்பாடுகள் நடந்திட்டிருக்கும் போது, நில அபகரிப்பு புகார்ல, "மாஜி'யை தூக்கி, "உள்ளே' வைச்சிட்டாங்க... மாவட்டச் செயலர் இல்லாம, விழா நடத்த முடியாதுங்கிறதால உடன்பிறப்புகள் வருத்தப்படுறாங்க... அதனால, "கட்சியில, "சீனியர்'ங்கிறதால, முபாராக் வீட்டு கல்யாணத்துக்கு ஸ்டாலின் வந்திட்டு போயிடுவாரு... அண்ணன் ஜாமினில் வந்ததும், இன்னொரு நாள் திறப்பு விழா நடக்கும்'னு உடன்பிறப்புகள் சொல்றாங்க பா...'' என்று சொல்லி முடித்தார் அன்வர்பாய்.""நானும் ஒரு, "மாஜி' விவகாரம் சொல் றேனுங்க...'' என்று விவாதத்தில் இணைந்தார் அந்தோணிசாமி.""சொல்லும் வே...'' என்று உற்சாகப்படுத்தினார் பெரியசாமி அண்ணாச்சி.""கடந்த ஆட்சியில போக்குவரத்துத் துறை மந்திரியா இருந்த நேரு வீட்டில, அரசு சம்பளம் வாங்கிட்டு, எட்டு பேர் டிரைவர்களா வேலை பார்த்திட்டு இருந்தாங்க... ஆட்சி மாற்றம் வந்ததும், அவங்களையெல்லாம், பஸ் ஓட்டி சம்பளம் வாங்க அனுப்பி வைச்சாங்க... இந்த அதிரடி நடவடிக்கை ஆறு மாசத்தில காலாவதியாகிடுச்சுங்க...""வெவ்வேறு இடத்துக்கு அனுப்பட்டவங்க, ஆளுங்கட்சி தொழிற்சங்க பிரமுகரை பிடிச்சு, தங்களுக்கு வசதியான இடத்தில அலுவலக, "போஸ்டிங்' வாங்கி வந்துட்டாங்க... "மாஜி' மந்திரியின், பி.ஏ.,வுக்கு நெருக்கமான ஒருவர், கொடுக்க வேண்டியதை கொடுத்து கண்காணிப்பாளர் பதவி வாங்கி, "செட்டில்' ஆகிட்டாராம்ங்க...'' என்று சொல்லி முடித்தார் அந்தோணிசாமி.""யாரு திருவொற்றியூர் ராஜேந்திரனா... ஒரு, "மீட்டிங்'கில் இருக்கேன்... பொறவு பேசுதேன்...'' எனக் கூறி, "மொபைல்' இணைப்பைத் துண்டித்தார் அண்ணாச்சி.""சார் பதிவாளர் அலுவலக அதிகாரிங்க பணம் வாங்கறதில்லையாம் ஓய்...'' என்று அடுத்த மேட்டரில் நுழைந்தார் குப்பண்ணா."" அதிசயமா இருக்கேபா...'' என்றார் அன்வர்பாய்.""அவசரப்படாதீரும்... முழுசா கேளும்... பத்திரப்பதிவு அலுவலகங்கள்ல, லஞ்சத்தை தடுக்க, கட்டணத் தொகையை, டி.டி.,யாத்தான் கொடுக்கணும்னு அரசு உத்தரவிட்டிருக்கு... திருவள்ளூர் மாவட்ட சார் பதிவாளர் அலுவலகங்கள்ல, இந்த டி.டி.,யை கொடுத்தா மட்டும் போறாதாம்... குறிப்பிட்ட அதிகாரியோட வங்கி கணக்கில, "கட்டிங்'கை போட்டுட்டு, ரசீதை காட்டினாத் தான், பத்திரப்பதிவு நடக்கறதாம் ஓய்...'' என்று சொல்லி முடித்தார் குப்பண்ணா; பெஞ்ச் அமைதியானது.