இடைத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு தான் வெற்றி என்று அமைதி காத்துவிடாமல், எதிர்க்கட்சிகள் வரிந்துகட்டிக் கொண்டு சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் களம் இறங்கியுள்ளன.அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் நடக்கும் இரண்டாவது இடைத் தேர்தல் சங்கரன்கோவில். முதல் இடைத் தேர்தல் திருச்சி மேற்கு தொகுதியில் நடந்தது. இரண்டு தேர்தல்களும், அ.தி.மு.க., அமைச்சர்கள் மறைவினால் ஏற்பட்டவை.
அழகிரி பொறுப்பில்... சங்கரன்கோவிலில் மத்திய அமைச்சர் அழகிரியை பொறுப்பாளராகக் கொண்டு தி.மு.க., பணிகளை மேற்கொண்டுள்ளது. கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். கட்சியின் தலைவர் கருணாநிதி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு மார்ச் 15ம் தேதி ஏற்பாடு செய்துள்ளனர்.
இக்கட்சியின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவை தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்கிறோம் என அறிவித்துள்ளன. காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர், தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளனர்.
விஜயகாந்தின் முகாம்: தே.மு.தி.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ள விஜயகாந்த், சங்கரன்கோவிலில் குறைந்தது ஒரு வார காலம் முகாமிடுகிறார் என, கூறுகின்றனர். தொகுதியில் உள்ள பட்டிதொட்டிகளில் எல்லாம் வேன் பிரசாரம் செய்வதற்கு வியூகம் வகுத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். விஜயகாந்தோடு, அவரது மனைவி பிரேமலதாவும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
வைகோவின் தலைமையில்... ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி, சங்கரன்கோவில் தொகுதிக்குள் உள்ளதால், வைகோ தலைமையிலேயே தேர்தல் பணிகளை ம.தி.மு.க., மேற்கொள்கிறது. பிரசாரத்தின் ஒவ்வொரு நிலையையும், அன்றாட தேர்தல் பணிகளையும் வைகோ உத்தரவின் பேரிலேயே நடத்தவுள்ளதாக
அக்கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
கண்டுகொள்ளாத கட்சிகள்: எதிர்க்கட்சி வரிசையில் உள்ள பா.ம.க, இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது. தங்களிடம் யாராவது ஆதரவு கேட்டால், அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க.,வை தவிர, பிறருக்கு ஆதரவு அளிப்பதாகவும்
கூறியுள்ளது. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் எந்த முக்கியத்துவமும் இல்லை என அறிவித்து ஒதுங்கியுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி, தே.மு.தி.க.,வை ஆதரிக்க முடிவு செய்துள்ளது.- எஸ்.திருநாவுக்கரசு -
