தேடல்

வளர்ச்சி உரிமை மாற்றத்தால் சி.எம்.டி.ஏ.,வுக்கு சட்ட சிக்கல் : பொது மக்களை கட்டாயப்படுத்தியதால் பிரச்னை

நகரமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யாமல், வளர்ச்சி உரிமை மாற்ற (டி.டி.ஆர்.,) நடைமுறைகளை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்டுள்ள வழக்குகளால், சி.எம்.டி.ஏ.,வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சாலை விரிவாக்கம் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு, தனியார் வசம் உள்ள நிலங்களை கையகப்படுத்தும்போது ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், டி.டி.ஆர்., எனப்படும், வளர்ச்சி உரிமை மாற்றம் என்ற புதிய நடைமுறையை அமல்படுத்த, சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது.
பயன் என்ன? : இதன்படி, ஒரு குறிப்பிட்ட நிலத்தை வளர்ச்சித் திட்டத்துக்காக எடுக்கும் போது, அதற்கான விலையை பணமாகக் கொடுக்காமல், அந்த நிலத்தில் கட்டடம் கட்டுவதற்கான உரிமையை, தளபரப்பு குறியீடு (எப்.எஸ்.ஐ.,) அடிப்படையில் கணக்கிட்டு, அதற்கான சான்றிதழ் வழங்கப்படும். இதை பயன்படுத்தி, நிலத்தின் உரிமையாளர் வேறு இடத்தில் தனக்கு சொந்தமான நிலத்தில் கூடுதல் தளபரப்பு குறியீடு அளவுக்கு கட்டடம் கட்டிக் கொள்ளலாம். இதில், வேறு இடத்தில் நிலம் இல்லாதவர்கள், இந்த உரிமையை விற்பனை செய்து கொள்ளலாம். கடந்த 2008ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இரண்டாவது மாஸ்டர் பிளானில், வளர்ச்சி உரிமை மாற்றத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. வளர்ச்சி விதிகளிலும் இதற்கான வழி வகை செய்யப்பட்டுள்ளது.
ஆர்வம் இல்லை : இதை செயல்படுத்துவதற்கான அரசாணை, 2009ம் ஆண்டு ஆகஸ்டில் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், வழக்கமான முறையைக் காட்டிலும், இப்படி பணம் வாங்காமல் வளர்ச்சி உரிமையை மட்டும் வாங்கிக் கொண்டு நிலம் அளிப்பதில், மக்களிடம் போதிய ஆர்வம் இல்லை. இதில், இப்போது வரை மெட்ரோ ரயில், நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் வளர்ச்சி உரிமை வழங்கக் கோரி, 186 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. இதிலும் இதுவரை, நான்கு விண்ணப்பங்கள் மட்டுமே தகுதியானதாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கும் தற்காலிக வளர்ச்சி உரிமை சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
வழக்கு : இந்நிலையில், சென்னை திருவொற்றியூர் சாலையில் குறிப்பிட்ட சிலர், கட்டட அனுமதி கேட்டு மாநகராட்சியில் விண்ணப்பித்தனர். தங்கள் நிலத்தில், சாலை விரிவாக்கத்துக்கான நிலங்களை, வளர்ச்சி உரிமை அடிப்படையில் அளிக்க வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகள், அவர்களை கட்டாயப்படுத்தியுள்ளனர்.இதில், குறிப்பிட்ட மூன்று விண்ணப்பதாரர்கள், இம்முறையில் நிலம் வழங்க மறுத்து, சி.எம்.டி.ஏ., - மாநகராட்சி மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். மாஸ்டர் பிளானில் உள்ள விதிமுறைகளின்படி, வளர்ச்சி உரிமை மாற்ற அடிப்படையில் நிலம் எடுப்பது, ஒரு வாய்ப்பு மட்டுமே; இதை கட்டாயப்படுத்த முடியாது.
சட்டமீறல் : மேலும், திட்ட அனுமதி வழங்கும்போது, சாலை விரிவாக்கத் திட்டத்துக்கான நிலங்களை கையகப்படுத்தும்போது, நகரமைப்பு சட்டத்தின் நான்காவது அத்தியாயத்தில் உள்ள, 36, 37, 38, 39 ஆகிய விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி தான், சி.எம்.டி.ஏ.,வும், மாநகராட்சியும் செயல்பட முடியும். இப்போது நடைமுறைக்கு வந்துள்ள வளர்ச்சி உரிமை மாற்றத்தைச் செயல்படுத்த, நகரமைப்பு சட்டத்தில் இடம் இல்லை. இதற்காக, சட்டத்தில் எவ்வித திருத்தமும் செய்யப்படவில்லை. சட்ட அங்கீகாரம் இல்லாமல், புதிய நடைமுறையைப் பின்பற்றுவது, சட்டமீறல் என, மனுதாரர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், வளர்ச்சி உரிமை மாற்றத்தை தொடர்ந்து செயல்படுத்துவதில் சி.எம்.டி.ஏ.,வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் மறுப்பு : இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத சி.எம்.டி.ஏ., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:சட்டசபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாஸ்டர் பிளானில் சேர்க்கப்பட்டு, அதன் அடிப்படையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, வளர்ச்சி உரிமை மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது; சட்டப்படியான அனைத்து வழிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. ஒரு சிலர் தொடர்ந்த வழக்கால், இம்முறையைச் செயல்படுத்துவதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.