தேடல்

வாஞ்சிநாதனுக்கு நாளை 101வது வீரவணக்கநாள்

இந்திய வரலாற்றில் மறக்க முடியாத சிறப்புமிக்க நாள் 1911ம் ஆண்டு ஜூன்

மாதம் 17ம் தேதி அன்று தான். இந்திய மாவீரனால் ஆங்கிலேய சாம்ராஜ்யம்

கருதிகலங்கிற்று. யார் அந்த மாவீரன்? நெல்லை தரணியிலே தமிழ் மணம் கமழும்

செங்கோட்டை சீமை தந்த சிங்கம் வாஞ்சிநாதன். தாய் திருநாட்டின் விடுதலைக்காக

தனது 25வது வயதில் உயிர் தியாகம் செய்தவர்.வெள்ளை ஏகாதிபத்திய அரசு

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.க்கு விதித்த கொடூர தண்டனையும், சிறையில் அவர்

ஆங்கிலேய அதிகாரிகளால் சித்ரவதை செய்யப்பட்டு பல கொடுமைகளுக்கு ஆளானார்

என்பது பற்றி வெளியான செய்திகளும் தமிழர்களை (இந்தியர்களை) வெறுப்படையச்

செய்தன. ஆங்கிலேய அதிகாரிகளை பழிவாங்க வேண்டும் என்ற ஆவேச எண்ணம் சில

இளைஞர்களுக்கு எழுந்தது. அவர்களில் ஒருவர்தான் வாஞ்சிநாதன்.

வ.உ.சி. கைது செய்யப்பட்ட போது நெல்லையில் பெரும் கலவரம் ஏற்பட்டது.

அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி ஆங்கிலேய அதிகாரிகள்

கைத்துப்பாக்கியால் சுட்டபோது அதில் 4 பேர் பலியாயினர். அந்த 4 பேர்

மரணத்திற்கு காரணமாக இருந்தர் தான் அப்போதைய நெல்லை மாவட்ட கலெக்டர்

ஆஷ்துரை.இந்திய மைந்தர்களின் செங்குருதியை குடித்த ஆஷ்துரையை தீர்த்துக்கட்ட

திட்டமிட்டார் வாஞ்சிநாதன். 1911 ஜூன் மாதம் 17ம் தேதி கலெக்டர் ஆஷ்துரை

நெல்லையிலிருந்து கொடைக்கானலுக்கு தன் குடும்பத்தினருடன் ரயிலில் போய்

கொண்டிருந்தார். அப்போது ஆஷ்துரையின் குழந்தைகள் கொடைக்கானலில் படித்துக்

கொண்டிருந்தனர். குழந்தைகளுடன் சில நாட்கள் தங்கியிருக்க மனைவியுடன் சென்று

கொண்டிருந்தார். ஆஷ்துரை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த செய்தி

வாஞ்சிநாதனுக்கும், சாவடி அருணாசலம் பிள்ளைக்கும் ரகசிய தகவல்

கிடைத்தது.ஆஷ்துரையை தீர்த்துக்கட்ட சரியான சந்தர்ப்பம் என இருவரும்

கருதினர். இதனையடுத்து வாஞ்சிநாதனும், சாவடி அருணாசலம்பிள்ளையும் அதே

ரயிலில் கடைசி பெட்டியில் நெல்லையிலிருந்து ஏறினார்கள். ரயிலில் ஏறும்போதே

இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். வாஞ்சிநாதன் கூறுகையில், ரயில்

மணியாச்சி நிலையத்தில் 30 நிமிடங்கள் நிற்கும். அந்த நேரத்தில் நான்

ஆஷ்துரை பயணம் செய்யும் முதல் வகுப்பு பெட்டி அருகே சென்று மறைந்து நின்று

துப்பாக்கியால் ஆஷ்துரையை சுட்டு விடுவேன். ஒருவேளை கைநடுக்கத்தால் எனது

குறி தப்பினாலோ அல்லது நான் மாட்டிக் கொண்டாலோ நீங்கள் வைத்திருக்கும்

துப்பாக்கியால் சுட்டு விட வேண்டும் என்று சாவடி அருணாசலம் பிள்ளையிடம்

வாஞ்சிநாதன் கூறினார்.


சாவடி அருணாசலமும் இத்திட்டத்துக்கு உறுதியளித்தார். பின்பு இருவரும்

ஆளுக்கொரு கைத்துப்பாக்கியை தங்களது இடுப்பில் மறைத்து வைத்துக் கொண்டனர்.

ரயில் மணியாச்சி ரயில் நிலையத்தை வந்தடைந்ததும் வாஞ்சிநாதனும், சாவடி

அருணாசலம் பிள்ளையும் ரயில் பெட்டியில் இருந்து கீழே இறங்கினார்கள்.

வாஞ்சிநாதன் சாவடி அருணாசலம் பிள்ளையிடம், ஆஷ்துரை பயணம் செய்யும் முதல்

வகுப்பு பெட்டிக்கு அடுத்து இரண்டாவது வகுப்பு பெட்டிக்கு அருகே நின்று

கொண்டு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கைகளை கவனித்துக் கொள்ளுங்கள். நான்

முதல் வகுப்பு பெட்டி அருகே சென்று ஆஷ்துரையை சுட்டுவிட்டு தப்பிவிடுவேன்.

நான் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதும் நீங்கள் தப்பிவிடுங்கள்

என்று கூறிவிட்டு வாஞ்சிநாதன் யாரும் சந்தேகப்படாதவாறு முதல் வகுப்பு

பெட்டி அருகே சென்று ஆஷ்துரையை சந்தித்து குட்மார்னிங் என்று சொன்னார்.இதை

பார்த்த ஆஷ்துரை வேண்டா வெறுப்புடன் பதில் குட்மார்னிங் சொல்லிவிட்டு

இங்கிருந்து போய்விடுமாறு சைகை காட்டினார். உடனே வாஞ்சிநாதன் தான் மறைத்து

வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து ஆஷ்துரையை சுட அவரை நோக்கி குறி

வைத்தார். இதை கவனித்துவிட்ட ஆஷ்துரை சுதாரித்துக் கொண்டு தொப்பியை எடுத்து

துப்பாக்கியை குறி தவற செய்யும் நோக்கத்துடன் வாஞ்சிநாதன் கை மீது

வீசினார். அந்த தொப்பி வாஞ்சிநாதன் கை மீது பட்டு கீழ விழுந்தது. அந்த

அளவுக்கு வாஞ்சிநாதன் உறுதியுடனும், வீரத்துடனும் நின்றார்.

பின்பு கண் இமைக்கும் நேரத்தில் ஆஷ்துரையை நோக்கி வாஞ்சிநாதன் சுட்டார்.

துப்பாக்கி குண்டும் ஆஷ்துரை மீது குறி தவறாமல் பாய்ந்தது. ரத்தம் பீறிட

ஆஷ்துரை கீழே சாய்ந்தார். இதை பார்த்ததும் ஆஷ்துரை மனைவி ஓவென்று அலறினார்.

துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் இரண்டாவது வகுப்பு பெட்டியில் பயணம்

செய்து கொண்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் வாஞ்சிநாதனை பிடிப்பதற்கு அவர்

அருகே சென்றனர். அப்போது வாஞ்சிநாதன் கையில் துப்பாக்கியை ஏந்தியபடி,

எனக்கு எதிரி ஆஷ்துரை தான் அவரை சுட்டுவிட்டேன். நீங்கள் எனக்கு

எதிரியல்ல கிட்டே வந்தால் உங்களையும் சுட்டுவிடுவேன் என்று கூறியபடி

கையில் துப்பாக்கியுடன் தலைநிமிர்ந்து வீரநடைபோட்டு சென்றார்

வாஞ்சிநாதன்.ஆஷ்துரையை சுட்டுவிட்டார், இனி அவர் தப்பிவிடுவார், நாமும்

தப்பித்து விடுவோம் என்று சாவடிஅருணாசலம் பிள்ளை ரயில் தண்டவாளம் வழியாக

தப்பி சென்றுவிட்டார். ஆனால் வாஞ்சிநாதன் தப்பி செல்ல முயற்சிக்கவில்லை.

நமது லட்சியம் ஆஷ்துரையை சுட்டுக் கொல்ல வேண்டும். அது நிறைவேறிவிட்டது.

இனிநாம் மரணம் அடைந்தாலும் பரவாயில்லை ஆங்கிலேய போலீஸ்காரர்களிடம் மாட்டிக்

கொண்டு சித்ரவதைபடுவதைவிட நாமே உயிரை மாய்த்துக் கொண்டாலும் பரவாயில்லை

என்று வீரமரணம் அடைந்திடுவோம் என்ற துணிச்சலான முடிவோடு அவசரமாக பக்கத்தில்

இருந்த கழிப்பறைக்குள் புகுந்தார். அடுத்த நொடியில் துப்பாக்கி வெடிக்கும்

சத்தம் கேட்டது அப்போது சரியாக காலை மணி 10.50 ஆகும்.


வாஞ்சிநாதனின் சட்டை பையை போலீசார் சோதனை செய்தபோது ஒரு கடிதத்தை

எடுத்தனர். அதில் எழுதப்பட்டிருந்ததாவது:- பிரிட்டிஷ் ஆட்சியை வெளியேற்றி

சுயராஜ்யத்தை ஸ்தாபிக்க ஒவ்வொரு இந்தியனும் முளைத்திருக்கின்றான். ராமர்,

கிருஷ்ணன், சிவாஜி போன்ற மாவீரர்கள் ஆண்ட இந்த புண்ணிய பூமிக்கு கேவலம்

மிலேச்ச வழியை சேர்ந்த ஒருவரை சக்கரவர்த்தியாக முடிசூட்ட ஏற்பாடு

நடக்கிறது. இதை மானமுள்ள எந்த இந்தியனும் அனுமதிக்க மாட்டான் என்பதற்கு

முதல் அறிவிப்பே வாஞ்சி. என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி

கையொப்பமிடப்பட்டிருந்தது.துப்பாக்கியை பரிசோதனை செய்ததில் அதில் குண்டு

எதுவும் இல்லை. ஆஷ்துரைக்கு ஒரு குண்டு, தனக்கு ஒரு குண்டு என்று ஏற்கனவே

முடிவு செய்து இரண்டு குண்டுகளை மட்டுமே துப்பாக்கியில் வாஞ்சிநாதன்

போட்டிருக்க வேண்டுமென்று போலீசார் கருதினர். 1911ம் ஆண்டின் இறுதியில்

ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு டில்லியில் முடிசூட்டு விழா நடைபெறும் போது நாடு

முழுவதும் புரட்சி வெடிக்க இருந்தது. வாஞ்சிநாதன் கடிதம் அதைத்தான்

குறிப்பிட்டது.வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டுக்கொன்ற செய்தி இந்தியா

மட்டுமின்றி இங்கிலாந்து பாராளுமன்றத்தையே நடுநடுங்க வைத்தது. ஆஷ்துரையை

சுட்டுக் கொல்வதற்கு சாவடி அருணாசலம்பிள்ளை மிகவும் உறுதுணையாக இருந்தார்.

நெல்லை மருத்துவ கல்லூரியில் படித்து வந்த சாவடி அருணாசலம்பிள்ளை

தாய்நாட்டின் விடுதலைக்காக படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு விடுதலை

போராட்டக் குழுவில் சேர்ந்தார்.வாஞ்சிநாதன் திருவாங்கூரில் உள்ள புனலூரில்

தந்தையை போலவே காட்டு இலாகா அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். அதன் மூலம்

தான் வாஞ்சிநாதனுக்கு கைத்துப்பாக்கி கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.

வாஞ்சிநாதன் 3 மாதம் விடுமுறையில் இருந்தபோதுதான் மணியாச்சி ரயில்

நிலையத்தில் ஆஷ்துரையை சுட்டுக் கொல்லும் வாய்ப்பு கிடைத்தது. சிறுவயதிலேயே

வாஞ்சிநாதனுக்கு திருமணம் ஆகிவிட்டது. மனைவி பெயர் பொன்னம்மாள்.

இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது.


வாஞ்சிநாதனின் வீட்டை போலீசார் சோதனையிட்டு பல கடிதங்களையும்,

பத்திரிக்கைகளையும் கைப்பற்றினர். அதன் அடிப்படையில் ஒட்டப்பிடாரம்,

செங்கோட்டை, நெல்லை, தென்காசி, மதுரை, தூத்துக்குடி ஆகிய ஊர்களில் பல

வீடுகளிலும், கட்சி அலுவலகங்களிலும் சோதனையிடப்பட்டன. ஆஷ்துரை கொலை

வழக்கில் தொடர்புடையவர்கள் என்று சிலரை போலீஸ் கருதியது. திருவாங்கூர்

சமஸ்தானத்தில் உள்ள புனலூரை சேர்ந்த வக்கீல் வெங்கடேச அய்யர் அவர்களில்

ஒருவர். தன்னை போலீஸ் அதிகாரிகள் தேடுகிறார்கள் என்பதை அறிந்த வெங்கடேச

அய்யர் கூறிய கத்தியால் தன் கழுத்தை தானே அறுத்து கொண்டு தற்கொலை

செய்தார்.இதேபோல் இந்த வழக்கில் கைது செய்யப்பட இருந்த மற்றொருவரான

செங்கோட்டை தர்மரராஜ் அய்யர் போலீசிடம் பிடிடக்கூடாது என்பதற்காக விஷம்

குடித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசாரால் தேடப்பட்ட ஒட்டப்பிடாரம்

மாடசாமிபிள்ளை, செங்கோட்டை சாவடி அருணாசலம் பிள்ளை ஆகியோர்

தலைமறைவாகிவிட்டனர். பின்பு அவர்களையும், மேலும் சிலரையும் போலீசார்

தேடிப்பிடித்து கைது செய்தனர். சாவடி அருணாசலம் பிள்ளையை பாண்டிச்சேரியில்

உள்ள போலீசார் கைது செய்தனர்.பின்பு அவர்மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த

வழக்கில் சாவடி அருணாசலம்பிள்ளை உட்பட பல பேர்களுக்கு பல ஆண்டுகள் தண்டனை

வழங்கப்பட்டது. அவர்களுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்துக்களும்

பறிமுதல் செய்யப்பட்டன. நாட்டின் விடுதலைக்காக பல ஆண்டுகள் சிறையில்

இருந்து வெளியே வந்த அருணாசலம்பிள்ளை சில ஆண்டுகள் வாழ்ந்து

மரணமடைந்தார்.நம் நாட்டின் விடுதலைக்காக தன் உயிரை ஈந்த வாஞ்சிநாதனுக்கு

நினைவு மண்டபம் கட்ட அப்போதைய முதல்வர் காமராஜரால் செங்கோட்டை முத்துசாமி

பூங்காவில் 9.8.1957 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் இப்போது தான்

பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த எம்ஜிஆர் ஆட்சியின் போது 17.8.1986 அன்று

திருஉருவச்சிலை நிறுவப்பட்டது.அவர் உயிர்நீத்த நாளான ஜூன் 17ம் தேதி 10.50

மணிக்கு ஒவ்வொரு ஆண்டும் நகராட்சி சங்கு ஒலிக்க வாஞ்சிநாதனுக்கு

வீரவணக்கம் செய்து சர்வகட்சி பிரமுகர்களாலும், பிராமணர் சங்கத்தின்

சார்பிலும் மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது. செங்கோட்டை தியாகி

வீரவாஞ்சிநாதன் (நடுகல்லு) முழுஉருவச்சிலை 101வது வீரவணக்கம் அஞ்சலி

செலுத்தும் நாள் நாளை (17ம் தேதி) நடக்கிறது.


—கே.செல்லப்பெருமாள்.