புதுக்கோட்டை: பெங்களுரூவில் வேலை செய்த வீட்டில் கைவரிசை காட்டிவிட்டு,
புதுக்கோட்டைக்கு தப்பிவந்த இளம்பெண்ணை கைது செய்த பெங்களூரு போலீஸார்,
அவரிடமிருந்து ஆறு லட்ச ரூபாய் மதிப்பிலான 300 கிராம் நகைகளை பறிமுதல்
செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அடுத்த செங்கீரை பகுதியைச்
சேர்ந்தவர் அழகன் மகள் செல்வி (24). இவர் பெங்களுரூ இந்திராநகர் பகுதியில்
உள்ள அடைக்கி ஆச்சி என்பவரது வீட்டில் வேலை செய்து வந்தார்.
கடந்த 22ம்
தேதி வீட்டு உரிமையாளர்கள் வெளியே சென்றிருந்தபோது, வீட்டில் தனியாக இருந்த
செல்வி பீரோவை திறந்து, அதிலிருந்த 300 கிராம் நகைகளை கொள்ளையடித்துவிட்டு
தலைமறைவானார். வீடு திரும்பிய உரிமையாளர்கள் செல்வி மாயமானதை கண்டு
திடுக்கிட்டனர். பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த
நகைகள் அனைத்தும் மாயமாகியிருந்தது.இதுகுறித்து அடைக்கி ஆச்சி கொடுத்த
புகாரின் பேரில் பெங்களுரூ போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் வீட்டு வேலை
செய்துவந்த செல்வி நகைகளை திருடிவிட்டு ஊருக்கு தப்பிச்சென்றது
தெரியவந்தது. இதையடுத்து புதுக்கோட்டைக்கு வந்த பெங்களுரூ போலீஸார்,
செங்கீரையில் தலைமறைவாக இருந்த செல்வியை கைது செய்தனர். அவர் மறைத்து
வைத்திருந்த ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான 300 கிராம் நகைகளையும் பறிமுதல்
செய்தனர்.
