தேடல்

வீரபாண்டி ஆறுமுகம் ஜாமின் மனு வாபஸ்

சென்னை : குடிசைகளுக்கு தீ வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஜாமின் மனு, ஐகோர்ட்டில் வாபஸ் பெறப்பட்டது. மற்றவர்களின் ஜாமின் மனுக்கள் மீதான விசாரணை, 25ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை, சேலம் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில், மேலும் சிலரும் கைது செய்யப்பட்டனர். வேலூர் சிறையில், வீரபாண்டி ஆறுமுகம் அடைக்கப்பட்டுள்ளார். இவரது ஜாமின் மனுவை, சேலம் செஷன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில், ஜாமின் மனு தாக்கல் செய்தார். இம்மனு நிலுவையில் இருக்கும் போது, வீரபாண்டி ஆறுமுகம் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்நிலையில், அவரது ஜாமின் மனு, நேற்று நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன் விசாரணைக்கு வந்தது. ஜாமின் மனுவை வாபஸ் பெறுவதாக, அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதே வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றவர்களின் ஜாமின் மனுக்களும், நேற்று விசாரணைக்கு வந்தன. அவர்களுக்கு ஜாமின் வழங்க, கடும் எதிர்ப்பு தெரிவித்து, அரசு குற்றவியல் வழக்கறிஞர் சண்முக வேலாயுதம் வாதாடினார். மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகினர். விசாரணையை, வரும் 25ம் தேதிக்கு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தள்ளிவைத்தார்.