தேடல்

விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ.,வினர் சிறை நிரப்பும் போராட்டம்

புதுடில்லி: பெட்ரோல் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து, நாடு முழுவதும் பா.ஜ., சார்பில், நேற்று, சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பெட்ரோல் விலையும், விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதைக் கண்டித்து, பா.ஜ., சார்பில், நேற்று, நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டது. டில்லியில், சிறை நிரப்பும் போராட்டத்தை ஒட்டி, நடத்தப்பட்ட பேரணியில், ராஜ்யசபா எதிர்கட்சித் தலைவர் அருண்ஜெட்லி கலந்து கொண்டு பேசியதாவது: மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, சாதாரண மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. அதுமட்டுமின்றி, அனைத்து வகையிலும் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது. மத்திய அரசின் பக்கம் மக்கள் இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளால் அரசை நிர்வகிக்க முடியவில்லை. பெட்ரோல் விலை, முன்னர், ஒரு பேரலுக்கு, 127 அமெரிக்க டாலராக இருந்தது. இது, நேற்று, 90 அமெரிக்க டாலராக குறைந்து விட்டது. இருப்பினும், மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைக்க முன்வரவில்லை. இவ்வாறு அருண்ஜெட்லி பேசினார்.

பேரணியில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், ராஜ்நாத் சிங், கட்சியின் டில்லி நகர தலைவர் விஜியேந்தர் சிங், முக்தர் அப்பாஸ் நக்வி உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் நடந்த போராட்டத்தில், லோக்சபா எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் கட்சித் தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர். மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில், அரசு தலைமை செயலக கட்டடம் நேற்று முன்தினம் தீப்பிடித்ததால்,அங்கு பா.ஜ., நடத்த இருந்த, சிறை நிரப்பும் போராட்டம் கைவிடப்பட்டது. காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் நடந்த, சிறை நிரப்பும் போராட்டத்தில், கட்சியின் மகளிரணி தலைவர் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார்.