திருப்பூர் : அவிநாசி அருகே விவசாயி மீது சாராயம், கஞ்சா விற்றதாக பொய்
வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர், மாற்றம் செய்யப்பட்டார். அவிநாசி
ஒன்றியம், ராமநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட நரியம்பள்ளியில், தனியார் சிலர்
குட்டை, கல்லுக்குழி, பள்ளவாரி நிலங்களை வளைத்து, ரியல் எஸ்டேட் விற்பனை
செய்து வருகின்றனர். அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து, அப்பகுதியை
சேர்ந்த விவசாயி ராமசாமி, தமிழக முதல்வர், கலெக்டர், பொதுப்பணித் துறைக்கு
புகார் மனு அனுப்பினார்; அவிநாசி ஜே.எம்., கோர்ட்டில், பொதுநல வழக்கையும்
தொடர்ந்தார். இதற்கிடையே, கடந்த மாதம் 21ம் தேதி, ராமசாமியின் தோட்டம்,
வீட்டில் இருந்து 153 லிட்டர் சாராயம், 180 கிராம் கஞ்சா, மான் கொம்பு
ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.
விவசாயி ராமசாமி மீது, போலீசார் பொய் வழக்கு போட்டதாக, திருப்பூர் எஸ்.பி.,
ஆஸ்ரா கர்க்கிடம், அவரது உறவினர்கள் முறையிட்டனர்.
ராமசாமியை பழி வாங்கும் நோக்கில், அவரது எதிரிகள் வேண்டுமென்ற சாராயம்,
கஞ்சா ஆகியவற்றை அவர் இடத்தில் வைத்தனரா என்பது குறித்து விசாரணை செய்து,
உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க, எஸ்.பி., உத்தரவிட்டார்.
அதன்பின், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வரதராஜன், தங்கவேலு, டிரைவர்
ஜெயச்சந்திரன் உட்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர். அவ்வழக்கில்,
எஸ்.பி., தலையிட்டதும், உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இந்நிலையில்,
விவசாயி மீது பொய் வழக்கு பதிவு செய்த, அவிநாசி இன்ஸ்பெக்டர்
கிருஷ்ணமூர்த்தி, திருப்பூர் மாவட்ட நில அபகரிப்பு பிரிவுக்கு
மாற்றப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் வெற்றிவேந்தன்,
அவிநாசிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
