தேடல்

வெஸ்ட் இண்டீஸ் அசத்தல் வெற்றி * கெய்ல், போலார்டு அபாரம் * நியூசிலாந்து ஏமாற்றம்

லாடர்ஹில்:நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டுவென்டி-20 போட்டியில், கிறிஸ் கெய்ல், போலார்டு அபார ஆட்டத்தை வெளிப்படுத்த, வெஸ்ட் இண்டீஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் சொதப்பிய நியூசிலாந்து அணி தோல்வி அடைந்து ஏமாற்றியது.அமெரிக்கா சென்றுள்ள நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட சர்வதேச டுவென்டி-20 தொடரில் பங்கேற்கின்றன. லாடர்ஹில் (புளோரிடா) நகரில் நேற்று நடந்த முதலாவது போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் ராஸ் டெய்லர், பீல்டிங் தேர்வு செய்தார்.கெய்ல் அபாரம்:முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு டுவைன் ஸ்மித் (17) ஏமாற்றினார். அடுத்து வந்த ஜான்சன் சார்லஸ் (24) நிலைக்கவில்லை. பின் இணைந்த கிறிஸ் கெய்ல், போலார்டு ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. நியூசிலாந்து பந்துவீச்சை வெளுத்துவாங்கிய இவர்கள் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். பிரேஸ்வெல் வீசிய 19வது ஓவரில் கெய்ல், ஹாட்ரிக் சிக்சர் அடித்தார். மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு தந்த போலார்டு, பிரேஸ்வெல் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்து, 24வது பந்தில் அரைசதம் அடித்தார்.வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்தது. கெய்ல் (52 பந்து, 85 ரன், 5 சிக்சர், 7 பவுண்டரி), போலார்டு (29 பந்து, 63 ரன், 5 சிக்சர், 5 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் பிரேஸ்வெல், வில்லியம்சன் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.நரைன் துல்லியம்:சற்று கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டில் (11) ஏமாற்றினார். கேப்டன் ராஸ் டெய்லர் (10), ரிட்டயர் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். வில்லியம்சன் (10) நிலைக்கவில்லை. சிறிது நேரம் தாக்குப்பிடித்த மற்றொரு துவக்க வீரர் ராப் நிகோல் (32) ஆறுதல் தந்தார். மிடில்-ஆர்டரில் வந்த டிம் சவுத்தி (23), ஜேக்கப் ஓரம் (27) ஓரளவு கைகொடுத்தனர். மற்றவர்கள் ஏமாற்ற நியூசிலாந்து அணி 18.3 ஓவரில் 153 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி தோல்வி அடைந்தது. சுழலில் அசத்திய சுனில் நரைன் 3 விக்கெட் வீழ்த்தினார்.ஆட்டநாயகன் விருது வெஸ்ட் இண்டீசின் கெய்லுக்கு வழங்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.டெய்லர் அவுட்தோள்பட்டை காயம் காரணமாக ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறிய நியூசிலாந்து கேப்டன் ராஸ் டெய்லர், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மீதமுள்ள டுவென்டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கமாட்டார். இதன்மூலம் ராஸ் டெய்லர் இந்த ஆண்டு மூன்றாவது முறையாக காயம் காரணமாக ஒரு தொடரின் பாதியில் விலகுகிறார். முன்னதாக ஜிம்பாப்வே, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரின் போது பாதியில் விலகினார். இதேபோல கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரூனி ஹிரா விலகினார்.