ஹாக்கி: இந்தியா அபார வெற்றி

புதுடில்லி: ஒலிம்பிக் ஹாக்கி தகுதிச் சுற்றில், இந்திய ஆண்கள் அணியின் வெற்றி தொடர்கிறது. நேற்று நடந்த போட்டியில் கனடாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான ஹாக்கி தகுதிச் சுற்று ஆட்டங்கள் டில்லியில் நடக்கின்றன. நேற்று இரவு நடந்த ஆண்கள் பிரிவு போட்டியில் இந்தியா, கனடா அணிகள் மோதின. இந்திய வீரர் சந்தீப் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பு மூலம் இரண்டு கோல்(40, 61வது நிமிடம்) அடித்தார். சிவேந்திர சிங்(26) ஒரு கோல் அடித்து, வெற்றிக்கு கைகொடுத்தார். கனடா சார்பில் மார்க் பியர்சன்(50), ஸ்காட் டப்பர்(53) தலா ஒரு கோல் அடித்தனர். தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, பைனல் வாய்ப்பை அனேகமாக உறுதி செய்துள்ளது.
பெண்கள் தோல்வி:
ஒலிம்பிக் ஹாக்கி தகுதிப் போட்டியில் இந்திய பெண்கள் அணி, தென் ஆப்ரிக்காவிடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
நேற்று, நடந்த போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. தென் ஆப்ரிக்க வீராங்கனைகளின் அதிவேக ஆட்டத்துக்கு நம்மவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை.
தென் ஆப்ரிக்க கேப்டன் டிர்கி சாம்பர்லின் தொடர்ந்து மூன்று கோல்(12, 32, 58வது நிமிடம்) அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். தவிர, சுலேடி டேமன்ஸ் 2 கோல்கள்(53, 67) அடித்து அசத்தினார். இந்தியா சார்பில் கேப்டன் அசுந்தா லக்ரா(23), சவுந்தர்யா எண்டேலா(52) தலா ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தனர். முடிவில் தென் ஆப்ரிக்க அணி 5-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
முன்னதாக நடந்த ஆண்கள் பிரிவு போட்டியில் போலந்து அணி, சிங்கப்பூரை 11-3 என்ற கோல் கணக்கில் வென்றது. மற்றொரு போட்டியில் பிரான்ஸ் அணி, இத்தாலியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.