ஹாக்கி: இந்திய பெண்கள் அபாரம்

புதுடில்லி: ஒலிம்பிக் ஹாக்கி தகுதிப் போட்டியில் இந்திய பெண்கள் அணி, போலந்தை 3-0 என்ற கோல் கணக்கில் சுலபமாக வீழ்த்தியது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான ஹாக்கி தகுதிச் சுற்று ஆட்டங்கள் டில்லியில் நடக்கின்றன. நேற்று நடந்த பெண்கள் பிரிவு போட்டியில் உலக ரேங்கிங் பட்டியலில் 13வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, பலம்குன்றிய போலந்தை(28வது இடம்) சந்தித்தது. இதில், இந்திய வீராங்கனைகள் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினர். ரிது ராணி(14வது நிமிடம்), ராணி ராம்பால்(36), பூனம் ராணி(62) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். போலந்து சார்பில் யாரும் கோல் அடிக்க இயலவில்லை. இறுதியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
தற்போது இந்திய பெண்கள் அணி 7 புள்ளிகளுடன் முதல் இடத்தில் <உள்ளது.
முன்னதாக நடந்த ஆண்களுக்கான போட்டியில் கனடா அணி, சிங்கப்பூரை 15-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. போலந்து அணி, இத்தாலியை 7-2 என்ற கோல் கணக்கில் வென்றது.