28 விமானங்களை இயக்க கிங்பிஷர் நிறுவனம் சம்மதம்

புதுடில்லி: தினமும் 28 விமானங்களை இயக்க, கிங் பிஷர் நிறுவனம் முன்வந்துள்ளது. நிதி நெருக்கடி காரணமாக, கிங் பிஷர் நிறுவனம் கடந்த ஆறு நாட்களாக, பல விமான சர்வீஸ்களை ரத்து செய்துள்ளது. இதனால், பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


விமானத் துறை டைரக்டர் ஜெனரலின் நிர்பந்தத்தின்படி, தற்போது 28 விமானங்களை கொண்டு, 170 சர்வீஸ்களை நடத்த, கிங் பிஷர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. விமான எரிபொருளை நேரடியாக வாங்கிக் கொள்ளவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிகரித்து கொள்ளவும், மத்திய அரசின் அனுமதியை, இந்நிறுவன அதிபர் விஜய் மல்லையா கோரியிருந்தார். ஆனால், தனியார் விமான போக்குவரத்து எந்த உதவியும் செய்ய முடியாது என, மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அஜித் சிங் தெரிவித்திருந்தார். முன்னறிவிப்பு இல்லாமல், விமான சர்வீஸ்களை ரத்து செய்த இந்நிறுவனத்துக்கு, விமானத் துறை டைரக்டர் ஜெனரல் அலுவலகம் கண்டனம் தெரிவித்திருந்தது. இதை தொடர்ந்து, கிங் பிஷர் நிறுவன அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.


இந்நிலையில், ஸ்டேட் பாங்க் உள்ளிட்ட சில வங்கிகள், கிங் பிஷர் நிறுவனத்துக்கு கடன் உதவி அளிக்க முன் வந்துள்ளன. கிங் பிஷர் நிறுவனத்துக்கு கடனுதவி அளிக்கும் திட்டத்துக்கு, நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியம் விடுத்துள்ள அறவிப்பில் கிங்பிஷர் நிறுவனம் ரூ40 கோடி வரி பாக்கிவைத்துள்ளதாக தெரிவித்துள்ளது