தேடல்

அடக்குமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும்

சென்னை:தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில், கொண்டு வரப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாட்டு அடக்கு முறையை, மத்திய அரசு கைவிட வேண்டும் என, அ.தி.மு.க., பொதுக் குழுவில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில், நேற்று நடந்த பொதுக் குழுவில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
வறுமை ஒழிப்பில், மத்திய அரசு அக்கறை செலுத்துவதில்லை; சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கிறது; காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடுவதை தாமதப்படுத்துகிறது.
தமிழக அரசு கேபிள் நிறுவனத்துக்கு, டிஜிட்டல் உரிமம் வழங்க மறுப்பது போன்ற, செயல்பாடுகளை சுட்டிக் காட்டி, தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
அடக்குமுறை
காங்கிரஸ் அல்லாத மாநில முதல்வர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை தடுக்கும் நோக்கில், நேரக் கட்டுப்பாடு என்ற புதிய அடக்குமுறையை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், தமிழக முதல்வரை, மத்திய அரசு பேச விடாமல்
அவமானப்படுத்தியுள்ளது.
இது போன்ற, அடக்குமுறைகளை, வருங்காலத்தில் மத்திய அரசு கைவிட வேண்டும்.
மருத்துவ நுழைவு தேர்வு
தமிழகத்தின் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில், 69 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றி வருகிறோம். ஆனால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கும் வகையில், மருத்துவ கல்விக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்யும் முடிவை, மத்திய அரசு கைவிட வேண்டும்.
கருணாநிதியின் குடும்ப கேபிள் நிறுவனத்துக்கு, ஆதாயம் தரும் வகையில், தமிழ்நாடு அரசு கேபிள், டிவி நிறுவனத்துக்கு, டிஜிட்டல் உரிமம் வழங்க, மத்திய அரசு மறுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக, டிஜிட்டல் உரிமத்தை, அரசு கேபிளில் நிறுவனத்துக்கு, மத்திய அரசு வழங்க வேண்டும்.
மின்சாரம்
தமிழகத்தில் மத்திய அரசு உற்பத்தி செய்யும், 4,830மெகாவாட் மின்சாரம் முழுவதையும், தமிழகத்துக்கே, மத்திய அரசு வழங்க வேண்டும். சில்லறை வணிகத்தில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மக்கள் விரோத கொள்கையை, மேற்கொண்ட மத்திய
அரசுக்கும், தி.மு.க.,வுக்கும் வன்மையான கண்டனத் தைதெரிவிக்கிறது.
மொத்தம் , 25 தீர்மானங்கள், பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டன.