தேடல்

அடுத்தவர்களை கிண்டல் பண்ணி காமெடி செய்வது மனிதாபிமானம் கிடையாது! சந்தானத்தை சாடுகிறார் சத்யன்

சின்னதம்பி பெரியதம்பி படத்தில் அறிமுகமான சத்யனுக்கு தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ஒன்பதுல குரு 50வது படம். பிரபல சினிமா தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவகுமார் மகனான சத்யன், ஆரம்பததில் அப்பா தயாரிப்பில் இளையவன், கண்ணா உன்னைத் தேடுகிறேன் படங்களில் ஹீரோவாக நடித்தார். அது அப்பாவை கடனாளியாக்கிதே தவிர இவரை ஹீரோவாக்கவில்லை. அதனால் காமெடியில் இறங்கினார். தனக்கென்று ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டு 50வது படத்துக்கு வந்து விட்டார். கடந்த ஆண்டு விஜய்யுடன் இவர் நடித்த நண்பன், துப்பாக்கி இரண்டும் ஹிட் என்பதால் சத்யனும் பெரிய காமெடியனாகிவிட்டார்.

தனது 50வது படத்தின் சந்தோஷத்தை நிருபர்களுடன் பகிர்ந்து கொண்ட சத்யன் கூறியதாவது: சினிமா பின்னணி இருந்தும் கஷ்டப்பட்டுதான் சினிமாவில் வளர்ந்தேன். ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஒரு காட்சியில் கூட நடித்திருக்கிறேன். இப்போ தனியா வளர்ந்து நிற்கிறேன். இதுவரை நான் பேட்டியெல்லாம் கொடுத்ததில்லை. காரணம் அந்த அளவுக்கு நான் பெருசா சாதிக்கலேங்கறதுதான். ஆனா நண்பனும், துப்பாக்கியும் என்னை பெரிய ஆளாக்கிடுச்சு. இப்போ நான் கருத்து சொல்லலாம். எந்தக் காலத்துலேயும் டபுள் மீனிங் வசனம் பேச மாட்டேன். ராஜகுமாரன்ங்ற படத்துல கருப்பா, அழகில்லாம இருந்த ஒரு பெண்ணை கிண்டல் பண்ணி ஒரு காட்சியில் நடிச்சேன். படம் வெளிவந்த பிறகு அந்தப் படத்தை பார்க்கும் அந்த பெண்ணின் தோழிகள், குடும்பத்தினர் எத்தனை துயரம் அடைந்திருப்பார்கள் என்று எண்ணிப்பார்த்து அன்று முதல் பெண்கள், மாற்றுத் திறனாளிகளை கிண்டல் செய்து நடிப்பதில்லை என்று முடிவு செய்தேன். சக மனிதனை கிண்டல் செய்வது மனிதாபிமானம் இல்லை. அது தவறு. அதை ஒரு போதும் செய்ய மாட்டேன். அதே மாதிரி ஒரு படம் வெற்றி அடைந்தால் அது என்னால்தான் என்று ஒரு போதும் சொல்ல மாட்டான். அப்படி எவன் நினைக்கிறானோ, அப்போதே அவன் தோல்வியின் படிக்கட்டில் கால் வைச்சுட்டான்னு அர்த்தம். எப்படி என் கருத்தெல்லாம் நல்லா இருக்கா என்றார் சத்யன்.