தேடல்

அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க பிரதமர் வேண்டுகோள்

புதுடில்லி: டில்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு விவகாரத்தில் நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் அமைதி காத்து தங்களுடடைய நடவடிக்கைகளுக்கு உதவும்படி பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டில்லியில், இம்மாதம், 16ம் தேதி இரவு, ஓடும் பஸ்சில், வெறிக் கும்பலால், மருத்துவ கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டார். நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக் கோரியும், இரண்டு நாட்களாக, மாணவர்கள் சார்பில், டில்லியில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இப்போராட்டம், நேற்று தீவிரமடைந்தது. ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள, ரைசினா ஹில்ஸ், காங்., தலைவர் சோனியாவின் வீடு அமைந்துள்ள, ஜன்பத் ஆகிய பகுதிகளில், ஏராளமான மாணவர்கள் திரண்டனர். இவர்களை, போலீசார், அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.இதைத் தொடர்ந்து, டில்லியின் முக்கிய பகுதிகளில், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விஜய் சவுக், இந்தியா கேட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், சாலைகளில் தடுப்பு களை வைத்தனர். இந்நிலையில் போராட்டக்காரர்கள், போலீசார் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.நிலைமை மோசமாவதை அறிந்த போலீசார், தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், மாணவர்களை கலைக்க முயற்சித்தனர்.

அமைதி காக்க வேண்டுகோள்: இந்நிலையில், அமைதி காக்கும்படி நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில்,

* மூன்று பெண்களுக்கு தந்தை என்ற முறையில், உங்களுடைய (நாட்டு மக்கள்) உணர்வுகளை ஏற்றுக்கொள்கிறேன்.


* நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுக்கிறேன்.


* பெண்களின் பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.


* இச்சம்பவத்தில் தாமதமின்றி நீதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


* இது தொடர்பாக நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்கும்.


* எனவே நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் அமைதி காத்து எங்களுடடைய நடவடிக்கைகளுக்கு உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.