தேடல்

அரசுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி தொடர் முழக்கப் போராட்டம் அறிவிப்பு

புதுச்சேரி:புதுச்சேரி அரசுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி, ராஜ்நிவாஸ் எதிரில் தொடர் முழக்கப் போராட்டத்தைமா. கம்யூ., அறிவித்துள்ளது.
மா.கம்யூ., செயலாளர் பெருமாள், செயற்குழு உறுப்பினர் முருகன்நேற்று நிருபர்களிடம் கூறியது:
மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கையால், புதுச்சேரியில் விவசாயமும், தொழிலாளர்களின் வேலை வாய்ப்பும் பாதித்துள்ளது. சுனாமிக்கு பின் மீன்பிடி தொழில் முற்றிலும் பாதித்துள்ளது. நகர்ப் புற, கிராமப்புற மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. மாநில அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக காங்., ஆட்சியின் தவறான அணுகுமுறையால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த காங்., ஆட்சியில் சுனாமி முறைகேடு, துப்புரவு பணி தனியாருக்கு தாரை வார்த்தது, பாதாள சாக்கடை திட்டம், இலவச வேட்டி சேலை வழங்கல் போன்ற மக்கள் நலத் திட்டங்களில் ஊழல் நடந்ததால், மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
மாநில அரசுக்கு 4 ஆயிரத்து 671 கோடி கடன் உள்ளது. நிதி பற்றாக்குறையால் சென்டாக் மாணவர் களுக்கு கல்வி உதவித் தொகை, வீடு கட்ட மானியம் உள்ளிட்ட திட்டங்களை அரசு செயல்படுத்த முடியவில்லை.
பாசிக், பாப்ஸ்கோ நிறுவனங்களில் பணியாற்றும் 5 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வில்லை. இப்பிரச்னைகள் தீர மத்திய அரசு, மாநில
அரசுக்கு கூடுதல் நிதி ஒதுக்கித்தர வேண்டும். மாநில அரசு பெற்ற கடன்களை ரத்து செய்ய வேண்டும்.
மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். மாநில அரசின் சுய ஆட்சிக்கு எதிராக செயல்படுவதை மத்திய அரசு கைவிட வேண்டும். அது மட்டுமின்றி மக்கள் விஷயத்தில் மாநில அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
இதையெல்லாம் வலியுறுத்தி, வரும் 8ம் தேதி கவர்னர் மாளிகை முன்பு தொடர் முழக்க போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்களை அழைக்கவும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கட்சியின் செயற்குழு ராஜாங்கம், நகர செயலாளர் பிரபு ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.