தேடல்

அரசு கேபிள் நிறுவனத்துக்கு "டிஜிட்டல்' உரிமம்

சென்னை:அரசு கேபிள் நிறுவனத்துக்கு, டிஜிட்டல் உரிமம் வழங்க, மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்துக்கு, பிரதமர்
உத்தரவிட வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மாநகரில், கேபிள் இணைப்புகளை டிஜிட்டல் மயம் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து, அரசு கேபிள் நிறுவனம், டிஜிட்டல் உரிமத்துக்கு விண்ணப்பித்திருந்தது. ஐந்து மாதங்களாகியும், அரசு கேபிள் நிறுவனத்துக்கு, மத்திய தகவல் தொடர்பு துறை உரிமம் வழங்கவில்லை.
செட்-டாப் பாக்ஸ்
இதனால், சென்னை மாநகரில், கேபிள் ஒளிபரப்பை டிஜிட்டல் மயமாக்குவதில், தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே, டிஜிட்டல் உரிமம் வைத்துள்ள தனியார் கேபிள் நிறுவனங்கள், செட்-டாப் பாக்ஸ்களை வழங்கி, டிஜிட்டல் மயமாக்கும் வேலையை துரிதப்படுத்தி வருகின்றன.
இப்பிரச்னையில் பிரதமர் தலையிட்டு, தமிழக அரசு கேபிள் நிறுவனத்துக்கு, டிஜிட்டல் உரிமம் வழங்க
வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:
தமிழக அரசு, கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம், அரசு கேபிள் நிறுவனத்தை துவங்கியது. 70 ரூபாய்க்கு, 100 சேனல்கள், இதன் மூலம் வழங்கப்படுகிறது. உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள், 23 ஆயிரம் பேர், அரசு கேபிள் நிறுவனத்தில் உறுப்பினராகி உள்ளனர்.
கூடுதல் சேனல்
அரசு கேபிள் நிறுவனத்தின் மூலம், 60 லட்சம் இணைப்புகள் வழங்கப் பட்டுள்ளன. நாட்டிலேயே, அதிக இணைப்புகளைக் கொண்ட கேபிள் ஒளிபரப்பு நிறுவனமாக, தமிழக அரசு கேபிள் நிறுவனம் உள்ளது; மிகக் குறைந்த கட்டணத்தில், கூடுதல் சேனல்களை வழங்குகிறது.
ஆனால், தனியார் கேபிள் ஆபரேட்டர்கள், 30 முதல் 70 சேனல்களை மட்டும் வழங்கி, அதற்கு 150 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை வ‹லிக்கின்றனர்.
கேபிள் இணைப்புகளை, டிஜிட்டல் மூலம், மாநகரங்களில் வழங்க வேண்டும் என, மத்திய அரசு, புதிய சட்டத்தை உருவாக்கியுள்ளது. கடைகோடி வாடிக்கையாளருக்கும், இந்த வசதி, குறைந்த கட்டணத்தில் கிடைக்க, அரசு கேபிள் நிறுவனம், 50 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
விண்ணப்பம்
டிஜிட்டல் உரிமம் பெறுவதற்காக, இந்த ஆண்டு,ஜூலை 5ம் தேதி, அரசு கேபிள் நிறுவனம் விண்ணப்பித்தது; ஐந்து மாதங்களுக்கு மேலாகியும், டிஜிட்டல் உரிமத்தை, மத்திய தகவல் தொடர்புத் துறை வழங்காமல் உள்ளது. டிஜிட்டல் மயமாவது, இதனால் தடைபட்டுள்ளது. ஆனால், டிஜிட்டல் உரிமம் வேண்டி விண்ணப்பித்த தனியாருக்கு மட்டும், மத்திய அரசு உரிமம் வழங்கிஉள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர், தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆகியோரை, அ.தி.மு.க., பார்லிமென்ட் குழுத் தலைவர் தம்பிதுரை தலைமையில், தமிழக எம்.பி.,க்கள் சந்தித்து வலியுறுத்தியும், இதுவரை டிஜிட்டல் உரிமம் வழங்கப்
படவில்லை.
பலனில்லை
இப்பிரச்னை தொடர்பாக, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் குழு, உங்களையும்சந்தித்து, டிஜிட்டல் உரிமம் வழங்க வலியுறுத்தியும், பலனில்லாமல் உள்ளது.
இதற்கிடையே, தமிழக அரசு கேபிள் நிறுவனத்துக்கு, டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளையும் உத்தரவிட்டுள்ளது. எனவே, தமிழக அரசு கேபிள் நிறுவனத்துக்கு, டிஜிட்டல் உரிமத்தை உடனடியாக வழங்க, நீங்கள் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, ஜெயலலிதா கூறியுள்ளார்.